பெல்தங்கடி தாலுகாவில் விளைநிலங்களில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்
பெல்தங்கடி தாலுகாவில் விளைநிலங்களில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்தன.
மங்களூரு-
பெல்தங்கடி தாலுகாவில் விளைநிலங்களில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்தன. இதனால் 200 பாக்கு மரங்கள் சேதமடைந்தன.
காட்டுயானைகள் அட்டகாசம்
தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகாவில் முண்டாஜே, தொட்டத்தாடி, மித்தபகலு, மரவந்திகே, சாருமாடி கிராமங்கள் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து அடிக்கடி காட்டு யானைகள் வெளியேறி அந்த கிராமங்களில் புகுந்து தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் பீதியடைந்துள்ள விவசாயிகள், தங்கள் விளைநிலங்களுக்கு செல்லவே அச்சத்தில் உள்ளனர்.
மேலும் காட்டு யானைகளின் அட்டகாசத்தை தடுக்க வனத்துறையினருக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்பேரில் வனத்துறையினரும் காட்டு யானைகளின் அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஆனாலும், காட்டு யானைகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
பாக்கு மரங்கள் சேதம்
இந்த நிலையில், நேற்று முன்தினம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் சாருமாடி கிராமத்தை சேர்ந்த சேகர் என்பவருக்கு சொந்தமான பாக்கு தோட்டத்தில் புகுந்தது. அந்த யானைகள், அங்கு நின்ற பாக்கு மரங்களை பிடுங்கி எறிந்து நாசப்படுத்தின. சுமார் 200-க்கும் மேற்பட்ட மரங்களை யானைகள் பிடுங்கி வீசின.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தப்பகுதியில் வேலை பார்த்து கொண்டிருந்தவர்கள், காட்டு யானைகளை அங்கிருந்து விரட்டினர். பின்னர் அந்த காட்டு யானைகள் மிருதஞ்ஜெய நதி பகுதிக்கு சென்றன. மேலும் அங்குள்ள ஆஷாபட் என்பவருக்கு சொந்தமான பாக்கு தோட்டத்திலும் புகுந்து பாக்கு மரங்களை பிடுங்கி எறிந்து சேதப்படுத்தின. இதையடுத்து அந்த காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டன.
இதனால் விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
கிராம மக்கள் கோரிக்கை
இதுபற்றிய தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது அந்தப்பகுதி மக்கள், தங்கள் பகுதியில் காட்டு யானைகள் அட்டகாசம் நிரந்தரமாக உள்ளது. இதனால் எங்களால் விளைநிலங்களுக்கு செல்லவே பயமாக உள்ளது. காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்து மீண்டும் வெளியேறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தக்க நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இதனை ஏற்ற வனத்துறையினர், காட்டு யானைகளை விரட்டியடிப்பதாகவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தக்க நிவாரணம் வழங்குவதாகவும் உறுதி அளித்தனர்.