7 மாநிலங்களில் பள்ளிகளில் மாணவர்கள் இடைநிற்பது அதிகரிப்பு
நாட்டின் 7 மாநிலங்களில் தேசிய சராசரி அளவை விட பள்ளிகளில் மாணவர்கள் இடையிலேயே நிற்பது அதிகரித்துள்ளது என்கிற தகவல் அதிர வைப்பதாக அமைந்துள்ளது.
புதுடெல்லி,
நாட்டில் பல்வேறு மாநிலங்களிலும் பள்ளிகளில் உயர்நிலைப்பள்ளி அளவில் மாணவர்கள் இடையிலேயே நிற்பது அதிகரித்து வருவதாக தெரிய வந்துள்ளது.
இது தொடர்பான தகவல்கள் மத்திய கல்வி அமைச்சகத்தின் திட்ட ஒப்புதல் வாரிய (பிஏபி) கூட்ட நடவடிக்கை குறிப்புகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
7 மாநிலங்களில் அதிகரிப்பு
அதில் தெரிய வந்துள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:-
* 2021-22-ம் ஆண்டில் உயர்நிலைப்பள்ளி அளவில் பள்ளிகளில் இருந்து மாணவர்கள் இடையில் நிற்பது பீகார் மாநிலத்தில் 20.46 சதவீதமாகவும், குஜராத்தில் 17.85 சதவீதமாகவும், அசாமில் 20.3 சதவீதமாகவும், ஆந்திராவில் 16.7 சதவீதமாகவும், பஞ்சாபில் 17.2 சதவீதமாகவும், மேகாலயாவில் 21.7 சதவீதமாகவும், கர்நாடகத்தில் 14.6 சதவீதமாகவும் இருந்துள்ளது.
* மேற்கண்ட 7 மாநிலங்களில் மாணவர்கள் இடையிலேயே நிற்பது தேசிய சராசரியான 12.6 சதவீதத்தைவிட அதிகம் ஆகும்.
மேற்கு வங்காளம், டெல்லி
* மேற்கு வங்காளத்தில் 2020-21-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2021-22-ம் ஆண்டில் மாணவர்கள் இடையிலேயே நிற்பது குறைந்துள்ளது. இது தொடக்கப்பள்ளி அளவிலாகும்.
* டெல்லியிலும் ஏராளமான மாணவர்கள் இடையிலேயே படிப்பை நிறுத்துகின்றனர். (மேற்கு வங்காளம், டெல்லி நிலவரம் பற்றிய புள்ளி விவரங்கள் வெளியாகவில்லை).
ம.பி., மராட்டியம்
* மத்திய பிரதேச மாநிலத்தில் உயர்நிலைப்பள்ளி அளவில் மாணவர்கள் இடையிலேயே நின்று விடுவது 2020-21-ல் 23.8 சதவீதமாக இருந்தது. ஆனால் அடுத்த ஆண்டிலேயே இது 10.1 சதவீதமாக அதிரடியாகக் குறைந்துள்ளது.
* மராட்டிய மாநிலத்தில் உயர்நிலைப்பள்ளி அளவில் மாணவர்கள் இடையிலேயே நிற்பது 2020-21-ல் 11.2 சதவீதமாக இருந்து, மறு ஆண்டில் 10.7 சதவீதமாகக் குறைந்தது.
உ.பி., ராஜஸ்தான்
* உத்தரபிரதேச மாநிலத்தில், பாஸ்தி (23.3 சதவீதம்), புதான் (19.1 சதவீதம்), எட்டவா (16.9 சதவீதம்), காசிப்பூர் (16.6 சதவீதம்), எட்டா (16.2 சதவீதம்), மகோபா (15.6 சதவீதம்), ஹர்தோய் (15.6 சதவீதம்), அசம்கார் (15 சதவீதம்) மாவட்டங்களில் மாணவர்கள் இடையிலேயே நிற்பது அதிகரித்துள்ளது.
* ராஜஸ்தான் மாநிலத்தில் மாணவர்கள் இடையிலேயே படிப்பை நிறுத்துவது தொடர்ந்து குறைந்து வருகிறது. ஆனால் பழங்குடி மற்றும் முஸ்லிம் மாணவர்கள் படிப்பை இடையிலேயே நிறுத்துவது அதிகமாக உள்ளது
இவ்வாறு அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.