மடிக்கணினிகளுக்கான இறக்குமதி கட்டுப்பாடு நிறுத்திவைப்பு; மத்திய அரசு நடவடிக்கை


மடிக்கணினிகளுக்கான இறக்குமதி கட்டுப்பாடு நிறுத்திவைப்பு; மத்திய அரசு நடவடிக்கை
x

மடிக்கணினி, கையடக்க கணினி உள்ளிட்ட பொருட்களுக்கான இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை அக்டோபர் 31-ந்தேதி வரை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.

இறக்குமதி கட்டுப்பாடு

இந்திய நிறுவனங்கள் சீனா, கொரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து மடிக்கணினி, கையடக்க கணினி மற்றும் கம்ப்யூட்டர் சாதனங்களை இறக்குமதி செய்கின்றன. ஆனால் உள்நாட்டிலேயே இந்த பொருட்கள் தயாரிப்பை ஊக்கப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் இந்த பொருட்களின் இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி இந்த பொருட்களின் இறக்குமதிக்கு மத்திய அரசு கடந்த 3-ந்தேதி கட்டுப்பாடுகளை விதித்தது. இந்த கட்டுப்பாடுகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் கூறியது.

உரிமம் கட்டாயம்

இது தொடர்பாக வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குனரகம் ஒரு அறிவிப்பாணையை வெளியிட்டது.அதில், மடிக்கணினி, கையடக்க கணினி, ஆல்-இன்-ஒன் பர்சனல் கம்ப்யூட்டர்கள், அல்ட்ரா ஸ்மால் பார்ம் பேக்டர் கம்ப்யூட்டர்கள், சர்வர்கள் ஆகியவற்றின் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக கூறப்பட்டு இருந்தது. மேலும் மைக்ரோ கம்ப்யூட்டர்கள், பெரிய மற்றும் மெயின்பிரேம் கம்ப்யூட்டர்கள், டேட்டா பிராசஸிங் எந்திரங்கள் ஆகியவற்றுக்கும் இந்த கட்டுப்பாடுகள் பொருந்தும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. எனவே மேற்படி பொருட்களை இனிமேல் இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசிடம் உரிமமோ அல்லது அனுமதியோ பெற வேண்டும்.

நிறுத்தி வைப்பு

மத்திய அரசின் இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்த நிலையில், இது தொடர்பாக இறக்குமதி நிறுவனங்கள் பல்வேறு பிரச்சினைகளை கிளப்பின. குறிப்பாக முன்னறிவிப்பின்றி கட்டுப்பாடு விதித்ததில் அதிருப்தியை தெரிவித்தன. இதைத்தொடர்ந்து இந்த கட்டுப்பாடுகளை 3 மாதங்களுக்கு மத்திய அரசு நிறுத்தி வைத்து உள்ளது. அதாவது மேற்படி பொருட்கள் இறக்குமதிக்கு அக்டோபர் 31-ந்தேதி வரை தற்போதைய நிலையே அதாவது உரிமம் இன்றி இறக்குமதி செய்வது தொடரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குனரகம் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், மடிக்கணினி, கையடக்க கணினி உள்ளிட்ட பொருட்களின் இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதித்து கடந்த 3-ந்தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பாணை நவம்பர் 1-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என கூறப்பட்டு இருந்தது.

நவம்பர் 1-ந்தேதி முதல்

அக்டோபர் 31-ந்தேதி வரை உரிமம் இல்லாமலேயே மேற்படி பொருட்களை இறக்குமதி செய்யலாம் என கூறியுள்ள இயக்குனரகம், நவம்பர் 1-ந்தேதி முதல் உரிமம் அல்லது அனுமதி தேவை என்றும் கூறியுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு மேற்படி பொருட்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்களுக்கு தற்காலிக நிம்மதியை கொடுத்து உள்ளது.

மடிக்கணினி, கையடக்க கணினி உள்ளிட்ட பொருட்களின் இறக்குமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்து உள்ளதால், சீனா, கொரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அதிக அளவில் மேற்படி பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவது குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் இந்த பொருட்கள் எங்கிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன? என்பதை மத்திய அரசு உன்னிப்பாக கண்காணிக்கவும் முடியும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

மேலும் இது உள்நாட்டு உற்பத்தியையும் ஊக்குவிக்கும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.


Next Story