வெயில் தாக்கத்தால் 14 பேர் பலியான சம்பவத்தில் மனிதநேயம் இருந்தால் ஷிண்டே, பட்னாவிஸ் மீது புகார் அளியுங்கள் - சஞ்சய் ராவத்


வெயில் தாக்கத்தால் 14 பேர் பலியான சம்பவத்தில் மனிதநேயம் இருந்தால் ஷிண்டே, பட்னாவிஸ் மீது புகார் அளியுங்கள் - சஞ்சய் ராவத்
x

வெயில் தாக்கத்தால் 14 பேர் பலியான சம்பவத்தில் ஆளுங்கட்சியினருக்கு தைரியம் மற்றும் மனித நேயம் இருந்தால் அவர்கள் ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னாவிசுக்கு எதிராக போலீசில் புகாா் அளிக்க வேண்டும் என சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

சஞ்சய் ராவத்துக்கு எதிராக புகார்

நவிமும்பை கார்கர் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பங்கேற்ற விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட 14 பேர் வெயில் தாக்கத்தால் உயிரிழந்தனர். அரசின் தவறான நிர்வாகத்தால் தான் 14 பேர் வெயில் தாக்கத்தால் உயிரிழந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்த சம்பவத்தில் 50 முதல் 75 பேர் உயிரிழந்து இருக்கலாம், கூட்டத்தில் வெயில் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மாநில அரசு மறைப்பதாக உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனாவை சேர்ந்த சஞ்சய் ராவத் எம்.பி. கூறியிருந்தார். தவறான தகவல்களை கூறியதாக அவருக்கு எதிராக ஷிண்டே சிவசேனாவை சேர்ந்த பாரத் கோகவலே, சஞ்சய் ஷிர்சாட் போன்றவர்கள் போலீசில் புகார் அளித்து உள்ளனர்.

மனித நேயம் இருந்தால்...

இது குறித்து சஞ்சய் ராவத் கூறியதாவது:-

மக்கள் வெயில் தாக்கம், போதிய குடிநீர் இல்லாமல் உயிரிழந்த போது மாநில மந்திரிகள் விருந்து சாப்பிட்டு கொண்டு இருந்து உள்ளனர். ஆளுங்கட்சியினர் எனக்கு எதிராக புகார் அளிக்கின்றனர். உயிரிழப்புகளுக்கு உங்களின் அரசு தான் காரணம். உங்களுக்கு தைரியம், மனித நேயம் இருந்தால் முதல்-மந்திரி (ஏக்நாத் ஷிண்டே), உள்துறை மந்திரி (தேவேந்திர பட்னாவிஸ்), கலாசார துறை மந்திரி (சுதீர் முங்கண்டிவார்) ஆகியோருக்கு எதிராக புகாா் அளியுங்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story