காங்கிரஸ் மேலிடம் அனுமதித்தால் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்
காங்கிரஸ் மேலிடம் அனுமதித்தால் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் என்று மந்திரி கே.எச்.முனியப்பா கூறினார்.
கோலார் தங்கவயல்
மந்திரி கே.எச்.முனியப்பா
கோலார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கே.எச்.முனியப்பா. முன்னாள் மத்திய மந்திரியான இவர் தற்போது சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் மந்திரியாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் மந்திரி கே.எச்.முனியப்பா நேற்று முன்தினம் கோலாரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாடாளுமன்ற தேர்தலில் கோலார் தொகுதியில் போட்டியிடுவீர்களா என்று என்னிடம் பலரும் கேட்கிறார்கள். கட்சி மேலிடம் அனுமதித்தால் நான் எனது மந்திரி பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்.
நாடாளுமன்ற தேர்தலை பா.ஜனதாவும், ஜனதா தளம்(எஸ்) கட்சியும் கூட்டணி அமைத்து எதிர்கொள்கின்றன. அவர்கள் திருமணத்திற்கு நாள் குறித்து விட்டார்கள்.
வெற்றிபெற்று காட்டுவேன்
அந்த கூட்டணி சார்பில் கோலார் தொகுதியில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்று குழப்பம் நீடித்து வருகிறது. இதுபற்றி நான் அறிந்தேன். எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நான் கண்டிப்பாக காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவேன்.
நான் தேர்தலில் கண்டிப்பாக வெற்றிபெற்று காட்டுவேன். இதில் சந்தேகம் இல்லை.
இந்த முறை காங்கிரஸ் கட்சி தலைவர்களின் ஒட்டுமொத்த ஒத்துழைப்புடன் வெற்றிபெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.