என் அப்பாவுக்கு ஏதாவது நேர்ந்தால்... லாலு பிரசாத் மகள் எச்சரிக்கை
லாலு பிரசாத் மகள் ரோகிணி ஆச்சார்யா டுவிட்டரில் நேற்று பதிவுகளை வெளியிட்டார்.
பாட்னா,
பீகாரில் நிலங்களை எழுதி வாங்கிக்கொண்டு பலருக்கு ரெயில்வேயில் வேலை கொடுத்ததாக முன்னாள் மத்திய மந்திரியும், ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சித் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் லாலு பிரசாத்திடம் சி.பி.ஐ. நேற்று நேரில் விசாரணை நடத்தியது.
இதையொட்டி, லாலு பிரசாத் யாதவுக்கு தனது சிறுநீரகங்களில் ஒன்றை அளித்து, புதுவாழ்வு அளித்துள்ள அவரது மகள் ரோகிணி ஆச்சார்யா டுவிட்டரில் நேற்று பதிவுகளை வெளியிட்டார்.
அரசியல் தொடர்பின்றி, சிங்கப்பூரில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிற இவர் தனது டுவிட்டர் பதிவுகளில் கூறி இருப்பதாவது:-
இந்த நபர்கள் (சி.பி.ஐ.யினர்) அப்பாவை துன்புறுத்துகிறார்கள். இந்த துன்புறுத்தல் ஏதாவது சிக்கலுக்கு வழிவகுத்தால், டெல்லி அதிகார மையத்தை நாங்கள் சும்மா விட மாட்டோம். பொறுமை எல்லை கடந்து போகிறது.
என் அப்பாவுக்கு ஏதாவது அசம்பாவிதம் நேர்ந்தால், நான் யாரையும் விட்டு வைக்க மாட்டேன். காலம் வலிமை வாய்ந்தது என்பது நினைவில் கொள்ளப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.