'வாரணாசியில் பிரியங்கா போட்டியிட்டிருந்தால் மோடி தோல்வி அடைந்திருப்பார்' - ராகுல் காந்தி


Modi would have lost If Priyanka contested Varanasi Rahul Gandhi
x

Image Courtesy : ANI

வாரணாசியில் பிரியங்கா காந்தி போட்டியிட்டிருந்தால் மோடி தோல்வி அடைந்திருப்பார் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

லக்னோ,

நாடாளுமன்ற தேர்தலில் உத்தர பிரதேச மாநிலத்தின் வாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடி 3-வது முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராயை 1,52,513 வாக்குகள் வித்தியாசத்தில் மோடி தோற்கடித்தார். இந்நிலையில் வாரணாசியில் பிரியங்கா காந்தி போட்டியிட்டிருந்தால் மோடி தோல்வி அடைந்திருப்பார் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து ரேபரேலியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது;-

"பா.ஜ.க. அயோத்தியில் தோல்வி அடைந்தது. எனது சகோதரி பிரியங்கா காந்தி வாரணாசி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் பிரதமர் மோடி வாரணாசியில் 2 முதல் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருப்பார். இதை நான் ஆணவத்தில் சொல்லவில்லை. நாட்டு மக்கள் மோடியின் அரசியலுக்கு எதிராக இருக்கிறார்கள் என்ற தெளிவான செய்தியை இந்த தேர்தலின் மூலம் சொல்லியிருக்கிறார்கள்.

நரேந்திர மோடியும், அமித்ஷாவும் நமது அரசியலமைப்பு சட்டத்துடன் விளையாட நினைக்கிறார்கள் என்பதை இந்த நாடு உணர்ந்து கொண்டது. மேலும் 2014-க்கு பிறகு இந்த நாட்டின் அரசியல் களத்தில் மாற்றம் ஏற்பட்டதையும் நாம் பார்த்தோம். முதல் முறையாக ஒரு பிரதமர் இந்த நாட்டின் கலாசாரத்திற்கு எதிராக மதம் மற்றும் வன்முறையை வைத்து அரசியல் செய்தார்.


உத்தர பிரதேச மாநில மக்கள் வெறுப்பு, வன்முறை மற்றும் ஆணவத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர். அரசியலமைப்பின் மீது கை வைத்தால் என்ன நடக்கும் என்பதை இந்த நாட்டு மக்கள் பிரதமர் மோடிக்கு தெளிவாக உணர்த்தி விட்டனர். அரசியலமைப்பு சட்டத்தின் முன்பு அவரை தலைவணங்க வைத்துவிட்டனர்."

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.


Next Story