காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தலா 10 கிலோ அரிசி இலவசம்
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தலா 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்று சித்தராமையா அறிவித்துள்ளார்.
பெங்களூரு-
பசியால் வாடக்கூடாது
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு கூட்டாக பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
நான் முதல்-மந்திரியாக இருந்தபோது, அன்ன பாக்கிய திட்டத்தின் கீழ் ஒருவருக்கு 7 கிலோ அரிசி இலவசமாக வழங்கினோம். அதன் பிறகு ஆட்சிக்கு வந்த பா.ஜனதா அதை 5 கிலோவாக குறைத்துவிட்டது. இதை நான் எதிர்த்தேன். ஆனால் பா.ஜனதா தனது முடிவை மாற்றவில்லை. கொரோனா நெருக்கடி காலத்தில் அன்ன பாக்கிய திட்டம் மற்றும் நரேகா திட்ட கிராமப்புற வேலை வாய்ப்புகள் மக்களுக்கு பெரும் பயனுள்ளதாக இருந்தன.
கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் அன்ன பாக்கிய திட்டத்தில் தலா 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும். இந்த திட்டத்தை நாங்கள் காங்கிரசின் 3-வது உறுதிமொழியாக அறிவிக்கிறோம். இதனால் அரசுக்கு கூடுதலாக ரூ.4 ஆயிரம் கோடி செலவாகும். எங்கள் திட்டத்தை செயல்படுத்துவோம் என்று கூறி ஒவ்வொரு வீட்டிலும் உத்தரவாத அட்டை வழங்கவும் முடிவு செய்துள்ளோம். கர்நாடகத்தில் பசியால் யாரும் வாடக்கூடாது என்பது எங்களின் விருப்பம்.
விளக்க வேண்டும்
இது சித்தராமையா திட்டம் அல்ல, மோடியின் திட்டம் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறுகிறார். ஒருவேளை இது மோடியின் திட்டமாக இருந்தால் குஜராத், உத்தரபிரதேசத்தில் இலவச அரிசி வழங்கும் திட்டம் அமலில் ஏன் இல்லை என்பதை அவர் விளக்க வேண்டும். உணவு பாதுகாப்பு சட்டத்தை பிரதமர் மோடி கொண்டு வந்தாரா?. பசவராஜ் பொம்மை பொய் பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இதற்காக தான் அவரை ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் முதல்-மந்திரி பதவியில் அமர வைத்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினார்.