பாஜக நாளைக்குள் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிடாவிட்டால்... ஜெகதீஷ் ஷெட்டர் எச்சரிக்கை


பாஜக நாளைக்குள் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிடாவிட்டால்... ஜெகதீஷ் ஷெட்டர் எச்சரிக்கை
x

கோப்புப்படம் PTI

பாஜக நாளைக்குள் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிடாவிட்டால் தனது ஆதரவாளர்களுடன் பேசி அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதாக ஜெகதீஷ் ஷெட்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பெங்களூரு,

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற மே மாதம் 10-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. இதையொட்டி காங்கிரஸ் கட்சி இதுவரை 166 தொகுதிகளுக்கும், ஜனதாதளம் (எஸ்) கட்சி 93 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. ஆளும் பாஜக கடந்த 11-ந் தேதி வெளியிட்ட முதல்கட்ட பட்டியலில் 189 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து இருந்தது. இதில் 52 புதிய முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருந்தது.

இதில் டிக்கெட் கிடைக்காத எம்.எல்.ஏ.க்களின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். மந்திரி எஸ்.அங்கார், ஆர்.சங்கர் எம்.எல்.சி., லட்சுமண் சவதி எம்.எல்.சி. ஆகியோர் விலகுவதாக அறிவித்தனர். தொடர்ந்து பாஜக நேற்று முன்தினம் 2-வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 23 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த பட்டியலில் தற்போது எம்.எல்.ஏ.க்களாக உள்ளவர்களில் 11 பேருக்கு டிக்கெட் நிராகரிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநில முன்னாள் முதல்-மந்திரியும் பாஜக தலைவருமான ஜெகதீஷ் ஷெட்டருக்கும் டிக்கெட் அறிவிக்கப்படவில்லை. இளைஞர்களுக்கு வழிவிடும்படி ஜெகதீஷ் ஷெட்டரிடம் பாஜக கூறியதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹுப்பள்ளி தார்வாட் மாநகராட்சியைச் சேர்ந்த 16 பாஜக உறுப்பினர்கள் ராஜினாமா செய்தனர். இதையடுத்து அவருக்கு டிக்கெட் வழங்கப்படுவதற்கு 99 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி பிஎஸ் எடியூரப்பா கூறியுள்ளார்.

இந்த நிலையில் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை நாளைக்குள் வெளியிட வேண்டும் என்று ஜெகதீஷ் ஷெட்டர் கூறியுள்ளார். இல்லாவிட்டால் நாளை தனது ஆதரவாளர்களுடன் பேசி அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

நான் கட்சித் தலைவர்களை சந்தித்தபோது, அவர்கள் சாதகமாக பதிலளித்தனர். மூத்த தலைவர்களிடம் பேசி முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்தனர். நாளை காலை வரை காத்திருப்பேன். மதியம், எனது நலம் விரும்பிகளுடன் சந்திப்பு நடத்துவேன். எனது ஆதரவாளர்கள் மாநிலம் முழுவதும் இருந்து வருகின்றனர். அவர்கள் என்னுடன் இருக்கிறார்கள், பாஜக இதை செய்திருக்கக் கூடாது என்றும், என்னை அவமானப்படுத்தி விட்டார்கள் என்றும் சொல்கிறார்கள். அவர்கள் என்னை முடிவெடுக்கும்படி கேட்டுக்கொள்கிறார்கள், என்னுடன் நிற்பதாக உறுதியளித்திருக்கிறார்கள்.

நான் நேர்மறையாக சிந்திக்கும் நபர். இந்த தருணம் வரை, எனக்கு நேர்மறையான எதிர்பார்ப்புகள் உள்ளன. நான் ஜே.பி. நட்டாவை சந்தித்தபோது, இரண்டு நாட்கள் பொறுத்திருப்பேன் என்றும் அதற்குள் முடிவெடுக்க வேண்டும் என்றும் அவரிடம் தெரிவித்தேன். அதேபோல், இரண்டு நாட்கள் காத்திருக்கிறேன். நாளை, என் நலம் விரும்பிகள் அனைவரும் வருகிறார்கள். இந்த விவகாரம் குறித்து விவாதித்து அவர்களின் கருத்தை கேட்போம். பாஜக பட்டியலை அறிவிக்காவிட்டால், அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பேன்." இவ்வாறு கூறினார்.


Next Story