தொங்கு சட்டசபை அமைந்தால் யாருக்கு ஆதரவு?
கர்நாடக சட்டசபை தேர்தலில் தொங்கு சட்டசபை அமைந்தால் யாருக்கு ஆதரவு? என்பது குறித்து ஜனார்த்தனரெட்டி கருத்து கூறியுள்ளார்.
பெங்களூரு:-
உறுதியான அடித்தளம்
முன்னாள் மந்திரி ஜனார்த்தனரெட்டி கல்யாண ராஜ்ஜிய பிரகதி கட்சியை தொடங்கியுள்ளார். அக்கட்சி வட கர்நாடகத்தின் சில தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. அந்த கட்சி பா.ஜனதாவின் வாக்குகளை பிரிக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். இதுகுறித்து ஜனார்த்தனரெட்டி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
நான் பொறுமையாக உள்ளேன். இந்த தேர்தலில் எங்கள் கட்சிக்கு உறுதியான அடித்தளத்தை அமைக்கிறோம். 2028-ம் ஆண்டுக்குள் எங்கள் கட்சி சொந்த பலத்தில் ஆட்சியை பிடிக்கும். நான் முதல்-மந்திரி பதவியை குறிவைத்து செயல்படுகிறேனா? என்பது முக்கியம் அல்ல. எனது இலக்கு 2028-ம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தல் தான். என்னை பற்றி மக்களுக்கு தெரியும். அதனால் தான் நான் புதிய கட்சியை தொடங்கினேன். மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன்.
வெற்றி பெறுவேன்
நான் பா.ஜனதாவில் இருந்தபோது மந்திரியாக பணியாற்றினேன். அப்போது நான் ஆற்றிய பணி என்ன என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். அதன் அடிப்படையில் என்னிடம் இருந்து நிறைய எதிர்பார்ப்புகளை மக்கள் கொண்டுள்ளனர். எங்கள் கட்சி 47 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. இதில் குறைந்தது 25 தொகுதிகளில் நாங்கள் வெற்றி பெறுவோம்.
நான் கொப்பல் தொகுதிகளில் போட்டியிடுகிறேன். அங்கு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. ஒரு வேளை தொங்கு சட்டசபை அமைந்தால், எங்களின் வாக்குறுதிகளை நிறைவேற்ற ஒத்துழைக்கும் கட்சிக்கு ஆதரவு அளிப்போம். சில கட்சிகள் சாதி, மதங்கள் அடிப்படையில் செயல்படுகின்றன. ஆனால் நாங்கள் அதில் இருந்து தொலைவில் இருக்க விரும்புகிறேன்.
தோல்வி அடைந்துவிட்டது
பசவண்ணரின் கொள்கைகள் தான் எங்களுக்கு வழிகாட்டி. சமத்துவத்தை வலியுறுத்தும் அந்த கொள்கை அடிப்படையில் நாங்கள் செயல்படுகிறோம். பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகள் எங்களின் எதிர்க்கட்சிகள். துரதிஷ்டத்தால் அரசியல் சதி காரணமாக நான் 12 ஆண்டுகள் காலம் மக்களிடம் இருந்து தூரமாக இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன்.
நமது எதிர்பார்ப்புகளை பா.ஜனதா நிறைவேற்றும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் பா.ஜனதா மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் தோல்வி அடைந்துவிட்டது. பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகளின் ஆட்சியை மக்கள் பார்த்துவிட்டனர். அவர்கள் புதிய கட்சி ஆட்சிக்கு வருவதை விரும்புகிறார்கள். வட கர்நாடகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த கர்நாடக மக்களும் என் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.
போட்டியாளர் யார்
பல்லாரி தொகுதியில் எனது மனைவி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து எனது சகோதரர் சோமசேகர் ரெட்டி பா.ஜனதா சார்பில் களத்தில் உள்ளார். தேர்தலில் போட்டியாளர் யார் என்பது முக்கியம் அல்ல. நாங்கள் வெற்றி பெறுவோம்.
இவ்வாறு ஜனார்த்தனரெட்டி கூறினார்.