புதிய செல்பி ஹாட்ஸ்பாட்... அயோத்தியின் அடையாளமாக மாறிய லதா மங்கேஷ்கர் சதுக்கம்


புதிய செல்பி ஹாட்ஸ்பாட்... அயோத்தியின் அடையாளமாக மாறிய லதா மங்கேஷ்கர் சதுக்கம்
x

டிசம்பர் 31ம் தேதி இரவு, ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாடுவதற்காக ஏராளமானோர் லதா மங்கேஷ்கர் சதுக்கத்தில் குவிந்தனர்.

அயோத்தி:

மறைந்த பிரபல பாடகி லதா மங்கேஷ்கரின் நினைவை போற்றும் வகையில், உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியின் சரயு நதிக்கரையில் 7.9 கோடி ரூபாய் மதிப்பில் வீணையுடன் பிரம்மாண்ட சதுக்கம் நிறுவப்பட்டு உள்ளது.

லதா மங்கேஷ்கரின் 93வது பிறந்த நாளை முன்னிட்டு, இந்த வீணையை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக திறந்து வைத்தார். இந்த வீணை 40 அடி நீளம், 12 மீட்டர் உயரம், 14 டன் எடை கொண்டதாகும்.

அயோத்தியின் மையப்பகுதியில் உள்ள இந்த சதுக்கம், உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளையும் வெகுவாக கவர்ந்துள்ளது. குறிப்பாக செல்பி எடுக்க விரும்புவோருக்கு முக்கிய ஹாட்ஸ்பாட்டாகவும், அயோத்தியின் புதிய அடையாளமாகவும் மாறியிருக்கிறது.

டிசம்பர் 31ம் தேதி இரவு, ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாடுவதற்காக அயோத்தி மட்டுமின்றி பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் லதா மங்கேஷ்கர் சதுக்கத்தில் குவிந்தனர். வீணை சிலையை புகைப்படம் எடுத்தும், அந்த வீணையுடன் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.

ராமர் கோவிலுக்கு செல்லக்கூடிய ராமர் பாதை மற்றும் தர்மப் பாதை சந்திப்பில் இந்த சதுக்கம் அமைந்துள்ளது. பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழாவையொட்டி இந்த பாதைகள் அகலப்படுத்தப்பட்டு அழகுபடுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story