பெண் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்


மோதல் விவகாரத்தை தொடர்ந்து ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரி, ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கவும் தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு:

மோதல் விவகாரத்தை தொடர்ந்து ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரி, ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் ஊடகங்களுக்கு பேட்டிஅளிக்கவும் தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

பெண் அதிகாரிகள் மோதல்

கர்நாடக இந்து சமய அறநிலையத்துறை கமிஷனராக பணியாற்றி வந்தவர் ரோகிணி சிந்தூரி (ஐ.ஏ.எஸ். அதிகாாி). அவர் மீது கர்நாடக கைவினை பொருட்கள் வளர்ச்சி கழக நிர்வாக இயக்குனராக பணியாற்றி வந்த ரூபா (ஐ.பி.எஸ். அதிகாரி) பல்வேறு புகார்களை கூறினார். ரோகிணி சிந்தூரியின் தனிப்பட்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பரப்பினார். மேலும் அவர் தொடர்பான சில ஆபாச படங்கள் உள்ளதாகவும், அதை தற்போதைக்கு வெளியிடவில்லை என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதற்கு உடனடியாக கடும் கண்டனம் தெரிவித்த ரோகிணி சிந்தூரி, ரூபா ஒரு மன நலம் பாதித்தவர் என்றும், அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அறிவித்தார். இதன் மூலம் உயர் பதவியில் பணியாற்றும் இந்த பெண்களுக்கு இடையே பகிரங்கமாக மோதல் வெடித்தது.

அரசுக்கு இக்கட்டான நிலை

மேலும் ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே.ரவி தற்கொலையில் ரோகிணி சிந்தூரியின் தொடர்பு குறித்தும் ரூபா கூறினார். அதாவது ரோகிணி சிந்தூரிக்கும், டி.கே.ரவிக்கும் இடையே நடந்த குறுந்தகவல் பரிமாற்றம் குறித்தும் குறிப்பிட்டார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த டி.கே.ரவியின் மனைவி குசுமா, கர்மா மெதுவாக திரும்பி வரும். அது வேகமாகவோ அல்லது மெதுவாகவோ நடைபெறலாம். ஆனால் அது நிச்சயம் தாக்கும்" என்று குறிப்பிட்டு ரோகிணி சிந்தூரி மீதான தனது கோபத்தை வெளிப்படுத்தினார். பெண் அதிகாரிகளின் இந்த மோதல் விவகாரம் கர்நாடக அரசுக்கு இக்கட்டான நிலையை ஏற்படுத்தியது.

மாறி மாறி புகார்

இதுகுறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, பெண் அதிகாரிகள் 2 பேருக்கும் நோட்டீசு அனுப்பி விளக்கம் கேட்கும்படி தலைமை செயலாளர் வந்திதா சர்மாவுக்கு உத்தரவிட்டார். மாநில அரசு நோட்டீசு அனுப்புவதற்கு முன்பே, ரோகிணி சிந்தூரி, ரூபா ஆகிய 2 பேரும் நேற்று முன்தினம் விதான சவுதாவில் தலைமை செயலாளர் வந்திதா சர்மாவை தனித்தனியாக நேரில் சந்தித்து மாறி, மாறி புகார் கூறினர். அது தொடர்பான புகார் கடிதங்களையும் அவர்கள் வழங்கினர்.

ரோகிணி சிந்தூரி சட்டவிரோதமான முறையில் அரசு பணத்தை முறைகேடு செய்ததாகவும், மைசூரு கலெக்டராக இருந்தபோது, அவர் தங்கியிருந்த அரசு பங்களாவில் கொரோனா காலத்தில் விதிகளை மீறி நீச்சல் குளம் கட்டி முறைகேடு செய்ததாகவும் கூறினார். அது மட்டுமின்றி, திருப்பதியில் இந்து அறநிலைத்துறை விடுதி கட்டிட முறைகேடு, விதிகளை மீறி சொகுசு பங்களா கட்டுவது, வெளிநாட்டில் இருந்து வீட்டு உபயோக பொருட்களை வரி கட்டாமல் கொண்டு வந்தது என்று அடுக்கடுக்கான புகார்களை அவர் கூறினார்.

அதே போல் ரோகிணி சிந்தூரி, ரூபா சட்ட விதிகளை மீறி எனது தனிப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு தனக்கு எதிராக அவதூறு பரப்பி இருப்பதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

இந்த நிலையில் ரோகிணி சிந்தூரி, ரூபா ஆகிய 2 பேரையும் கர்நாடக அரசு அதிரடியாக பணி இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. அவர்கள் 2 பேரும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளனர். மேலும் ரூபாவின் கணவரான சர்வே, நில ஆவணங்கள் துறை கமிஷனர் முனீஸ் மவுட்கல் அரசு பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை முதன்மை செயலாளராக பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பெண் அதிகாரிகள் மோதிக்கொண்ட விவகாரத்தில் 3-வது நபர் அதாவது ரூபாவின் கணவரும் தண்டிக்கப்பட்டு உள்ளார். ஏனென்றால் ரோகிணி சிந்தூரி தொடர்பான தனிப்பட்ட புகைப்படங்களை ரூபாவுக்கு அவரது கணவர் தான் வழங்கியுள்ளார் என்றும், அதனால் அவர் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

அரசு உத்தரவு

இந்த நிலையில் கர்நாடக அரசு அந்த 2 அதிகாரிகளுக் கும் வாய்ப்பூட்டு போட்டுள்ளது. அதாவது ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு அவர்கள் 2 பேருக்கும் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

உங்களின் கருத்துகளை மற்றொரு அரசு அதிகாரிக்கு எதிராக கூறி ஊடகங்களை பயன்படுத்து கொண்டுள்ளீர்கள் என்று அரசுக்கு தெரியவந்துள்ளது. நீங்கள் புகார்களையோ அல்லது குறைகளையோ தெரிவிக்க சம்பந்தப்பட்ட அதிகாரி, அலுவலகம் உள்ளது. ஆனால் அங்கு உங்களின் புகார்களை தெரிவிக்காமல் நேரடியாக ஊடகங்களில் தெரிவித்துள்ளீர்கள். இது அரசுக்கு இக்கட்டான நிலையை ஏற்படுத்தியுள்ளது.

பேட்டி அளிக்க தடை

நிா்வாக சேவையில் இருப்பவர்கள் இவ்வாறு நடந்து கொண்டது சரியல்ல. மேலும் இது அகில இந்திய சேவை விதிகளை மீறுவதாக உள்ளது. நிர்வாக சேவை அதிகாரிகள், அரசின் திட்டங்கள் குறித்து ஊடகங்களிடம் பேச அனுமதி உண்டு.

ஆனால் தனிப்பட்ட புகார்கள், குறைகளை ஊடகங்களிடம் கூறியதை நீங்கள் தவிா்த்து இருக்க வேண்டும். அதனால் இனி நீங்கள் இத்தகைய தனிப்பட்ட விஷயங்கள் குறித்து ஊடகங்களில் பேசக்கூடாது. அகில இந்திய சேவை நடத்தை விதிகளை நீங்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story