சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க கடற்படை கப்பல் விரைந்தது
உள்நாட்டுப் போர் நடைபெறும் சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்கு கடற்படை கப்பல் விரைந்துள்ளது.
உள்நாட்டுப்போர்
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையே உள்நாட்டுப் போர் மூண்டுள்ளது. கடந்த சில நாட்களாக நடந்து வரும் இந்த பயங்கர மோதலில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்து உள்ளனர்.
தலைநகர் கார்தூமை ஒட்டியுள்ள பல்வேறு பகுதிகளில் நேற்றும் பயங்கர சண்டை நிகழ்ந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் நாடு முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது.
சூடானில் ஏற்பட்டுள்ள இந்த உள்நாட்டுப்போர் சர்வதேச அளவில் பெரும் கவலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. அங்கு வசித்து வரும் தங்கள் நாட்டு குடிமக்களை வெளியேற்றும் பணிகளை உலக நாடுகள் மேற்கொண்டு உள்ளன.
3 ஆயிரம் இந்தியர்கள்
சூடானில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட இந்தியர்கள் வசித்து வருகின்றனர். எனவே அவர்களை பத்திரமாக மீட்பதற்கு மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து உள்ளது. இது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் சமீபத்தில் உயர்மட்டக்குழு ஆலோசனை நடத்தியது. இதில் சூடானில் இருந்து இந்தியர்களை மீட்பதற்கான வழிமுறைகள் ஆராயப்பட்டன. இதைத்தொடர்ந்து இந்தியர்களை வெளியேற்றும் பணிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது. அதன்படி கடற்படையை சேர்ந்த ஐ.என்.எஸ். சுமேதா கப்பல் சூடானுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இது சூடான் துறைமுகத்தை அடைந்துள்ளது. இதைப்போல விமானப்படையை சேர்ந்த 2 சி-130 ஜே ரக விமானங்களும் சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
மத்திய அரசு அறிக்கை
இந்த நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய அரசு நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
உள்நாட்டுப்போரால் பாதிக்கப்பட்டுள்ள சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இந்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.
சூடானில் உருவாகி வரும் சிக்கலான பாதுகாப்பு நிலைமையை நாங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம்.
சூடானில் சிக்கித் தவிக்கும் மற்றும் வெளியேற விரும்பும் இந்தியர்களின் பாதுகாப்பான பயணத்துக்காக நாங்கள் பல்வேறு கூட்டாளிகளுடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம்.
அந்தவகையில், சூடான் அதிகாரிகள் மட்டுமின்றி ஐ.நா., சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் மத்திய வெளியுறவு அமைச்சகமும், சூடானில் உள்ள இந்திய தூதரகமும் தொடர்ந்து தொடர்பில் இருக்கின்றன.
வான்வெளி மூடல்
இந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக 2 இந்திய விமானப்படை விமானங்கள் தற்போது ஜெட்டாவில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், ஐ.என்.எஸ். சுமேதா கப்பல் சூடான் துறைமுகத்தை அடைந்துள்ளது.
கார்தூமில் நடந்து வரும் கடுமையான சண்டை காரணமாக, தரைவழி இயக்கம் அபாயகரமான நிலையில் உள்ளது. இதைப்போல வெளிநாட்டு விமானங்களுக்கு சூடான் வான்வெளி மூடப்பட்டு உள்ளது.
இது ஒருபுறம் இருக்க, சூடானில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களுடன் நமது தூதரகம் தொடர்ந்து தொடர்பில் உள்ளது. பாதுகாப்பான நடமாட்டம் மற்றும் தேவையற்ற ஆபத்தைத் தவிர்க்க வேண்டியதன் அவசியம் குறித்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கி வருகிறது.
பாதுகாப்பு சூழல் அனுமதிக்கும்போது கார்தூம் நகரத்திலிருந்து வெளியேறுதல் உட்பட சாத்தியமான அனைத்து உதவிகளும் ஒருங்கிணைக்கப்படும்.
இவ்வாறு மத்திய அரசின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.