எனக்காக எதுவும் கேட்பதற்கு பதிலாக இறந்து விடுவேன்: சிவராஜ் சிங் சவுகான் உருக்கம்


எனக்காக எதுவும் கேட்பதற்கு பதிலாக இறந்து விடுவேன்:  சிவராஜ் சிங் சவுகான் உருக்கம்
x

ஒரு நபரை மையப்படுத்தும்போது, அவர் தன்னை பற்றி மட்டுமே சிந்திக்கிறார். ஆனால், பா.ஜ.க. ஓர் இயக்கம் என்று சவுகான் கூறினார்.

போபால்,

மத்திய பிரதேசத்தில் 230 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 3-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், 163 தொகுதிகளை கைப்பற்றிய பா.ஜ.க., பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது.

இதனிடையே, மத்திய பிரதேச முதல்-மந்திரி யார் என்பதில் ஒரு வாரம் வரை முடிவு செய்யப்படாமல் இருந்து வந்தது. அதற்கு நேற்று பதில் கிடைத்தது. முன்னாள் முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகானின் மந்திரி சபையில் இடம்பெற்ற மோகன் யாதவ் (வயது 58) முதல்-மந்திரி பதவிக்கு அறிவிக்கப்பட்டார். முதல்-மந்திரி பதவியேற்பு விழா நாளை நடைபெறும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேபோன்று, மத்திய பிரதேசத்தில் ஜெகதீஷ் தேவ்த மற்றும் ராஜேஷ் சுக்லா ஆகிய இருவர் துணை முதல்-மந்திரிகளாக அறிவிக்கப்பட்டனர். இந்த முறை பா.ஜ.க. வெற்றி பெற்ற போதும், 5 முறை எம்.பி.யாக இருந்த மற்றும் 4 முறை முதல்-மந்திரி பதவி வகித்த அனுபவம் வாய்ந்த சிவராஜ் சிங் சவுகானுக்கு, மீண்டும் முதல்-மந்திரியாகும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இந்நிலையில், போபால் நகரில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் பேசும்போது, நான் பணிவாக கூற விரும்புவது என்னவென்றால், டெல்லிக்கு சென்று கட்சியிடம் இருந்து எனக்காக எதுவும் கேட்பதற்கு பதிலாக, இறந்து விடுவேன். இதனை நான் செய்யமாட்டேன் என்று கூறியுள்ளார்.

ஒரு நபரை மையப்படுத்தும்போது, அவர் தன்னை பற்றி மட்டுமே சிந்திக்கிறார். ஆனால், பா.ஜ.க. ஓர் இயக்கம். ஒவ்வொரு தொண்டருக்கும் சில வேலைகள் உள்ளன. எனக்கு ஒதுக்கப்படும் எந்த வேலைகளையும் நான் செய்வேன் என்று கூறினார்.


Next Story