வருணா, கோலார் தொகுதிகளில் போட்டியிடுவேன்
இது தான் எனது கடைசி தேர்தல் சித்தராமையா சொல்கிறார்
மைசூரு:-
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுடன், ஜனதாதளம் (எஸ்) கட்சி ரகசிய கூட்டணி அமைத்தது. எனவே அதுபோல் வருகிற தேர்தலிலும் இருகட்சிகளும் கூட்டணி வைத்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. எனது கடைசி சட்டசபை தேர்தல் இதுதான். கடைசி தேர்தலில் போட்டியிடும் நான் எனது சொந்த ஊரான வருணா தொகுதியில் போட்டியிட ஆசைப்படுகிறேன்.
நான் ஏற்கனவே வருணா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற போது தான் முதல்-மந்திரியாக பதவி ஏற்றேன். இதற்காக நான் மீண்டும் வருணாவில் போட்டியிடவில்லை. எனது கடைசி தேர்தல் என்பதால் வருணாவில் போட்டியிட ஆசை. மேலும் எனது ஆதரவாளர்கள் கோலாரில் போட்டியிட கூறுகிறார்கள்.
எனவே இரு தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளேன். தேர்தல் குறித்து குமாரசாமி ஒரு தேசிய கட்சி மேலிடத்திடம் பேசி இருப்பதாக நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால் எங்கள் கட்சி தலைவர்கள் யாரும் அவருடன் பேசவில்லை. கூட்டணி தொடர்பாக நாங்கள் ஆலோசிக்கவில்லை. கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி தனித்து ஆட்சிக்கு வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.