கம்சரின் வழித்தோன்றல்களை அழிக்க கடவுள் என்னை அனுப்பினார் - அரவிந்த் கெஜ்ரிவால்
நான் கிருஷ்ண ஜென்மாஷ்டமி அன்று பிறந்தேன் கடவுள் என்னை அனுப்பினார் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
காந்திநகர்,
குஜராத் மாநிலத்தில் வரும் டிசம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்ற ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் களமிறங்கியுள்ளன.
அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி முதலில் டெல்லியில் ஆட்சியமைத்த நிலையில் அது பின்னர் பஞ்சாப்பில் ஆட்சியை கைப்பற்றியது. தற்போது, குஜராத்திலும் ஆட்சியை கைப்பற்ற ஆம் ஆத்மி தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளது.
அந்த வகையில், ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து தற்போதே தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டார்.
அந்த வகையில் குஜராத்திற்கு இன்று சென்ற கெஜ்ரிவால் வதோதராவில் பொதுமக்கள் மத்தியில் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது, அவர் கூறுகையில், நான் கிருஷ்ண ஜென்மாஷ்டமி அன்று பிறந்தேன். கம்சரின் வழித்தோன்றல்களை அழிக்கவும், ஊழல் மற்றும் குண்டர்களிடம் இருந்து பொதுமக்களை விடுவிக்க வேண்டும் என்ற சிறப்பு வேலைக்காகவும் கடவுள் என்னை அனுப்பியுள்ளார்.
கடவுளின் ஆசையை நிறைவேற்ற நாம் இணைந்து செயல்படுவோம். கடவுள் என்னுடன் உள்ளார். மக்கள் என்னுடன் உள்ளனர். மாற்றம் வேண்டும் என்பதால் தான் மக்கள் விரக்தியில் உள்ளனர்' என்றார்.