ஐதராபாத்தில் சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு: மேலும் ஒருவர் கைது


ஐதராபாத்தில்  சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு: மேலும் ஒருவர் கைது
x
தினத்தந்தி 5 Jun 2022 1:18 PM IST (Updated: 5 Jun 2022 1:19 PM IST)
t-max-icont-min-icon

இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். இதன் மூலம் இந்த வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

ஐதராபாத்,

ஐதராபாத்தில் காரில் சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், வழக்கில் தொடர்புடைய ஒருவர் தலைமறைவு ஆகியுள்ளார். அவரை கைது செய்யும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

ஐதராபாத்தைச் சேர்ந்தவர், அந்த 17 வயது சிறுமி. இவர் கடந்த 28-ந் தேதி அங்கு ஒரு கிளப்பில் நடைபெற்ற விருந்துக்கு சென்றிருந்தார். அங்கு அவர் ஒரு இளைஞரை சந்தித்துள்ளார். விருந்து முடிந்த பின்னர் அந்த இளைஞர், சிறுமியை அவரது வீட்டில் விட்டு விடுவதாக கூறி காரில் தன்னோடு வருமாறு அழைத்திருக்கிறார். அவருடனும், அவரது நண்பர்களுடனும் அந்த சிறுமி சொகுசு காரில் சென்றிருக்கிறார். ஆனால் தனக்கு என்ன நேரப்போகிறது என்பதை அப்போது அந்த சிறுமி அறிந்திருக்கவில்லை.

அந்த சொகுசு காரை ஜூபிளி ஹில்ஸ் பகுதியில் திடீரென நிறுத்தி உள்ளனர். அதைத் தொடர்ந்துதான் அந்த விபரீதம் அரங்கேறியது. காரில் வந்த 5 பேரும் அந்த சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்தனர்.

அதைத் தொடர்ந்து வீடு திரும்பிய சிறுமி, தனக்கு நேர்ந்த கதியை தந்தையிடம் அழுது கொண்டே கூற, அவர் போலீசில் புகார் செய்தார். அதைத் தொடர்ந்து மானபங்க வழக்கு ஒன்றை போலீசார் பதிவு செய்தனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் 5 பேர் என தெரிய வந்துள்ளது. அவர்களில் 3 பேர் மைனர் ஆவார்கள். மற்ற இருவர், சாதுதீன் மாலிக் மற்றும் உமர்கான் ஆவார்கள். இவர்கள் அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் என கூறப்படுகிறது. குறிப்பாக ஆளும் தெலுங்கான ராஷ்டீர சமிதியின் தோழமைக்கட்சியான ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சிக்கு நெருக்கமானவர்கள் என கூறப்படுகிறது.

சம்பவம் நடந்ததாகக்கூறப்படுகிற சொகுசு கார், தெலுங்கானா மாநில அரசில் முக்கிய பங்கு வகிக்கிற தெலுங்கானா ராஷ்டீர சமிதி கட்சி தலைவர் ஒருவருக்கு உரியது என கூறப்படுகிறது.இதனால் இந்த வழக்கு விஸ்வரூபம் எடுக்கத்தொடங்கியது. மானபங்க வழக்கை கூட்டு பலாத்கார வழக்காக போலீசார் மாற்றி உள்ளனர்.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நியாயம் கிடைக்க சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று பா.ஜ.க.வும், காங்கிரசும் ஓங்கிக் குரல் கொடுக்கின்றன. இதற்கிடையே இந்த சம்பவம் 28-ந் தேதி நடந்துள்ள நிலையில், 3 நாட்கள் கழித்து 31-ந் தேதியன்றுதான் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது குறித்து தேசிய குழந்தை உரிமைகள் கமிஷன் கவலை கொண்டுள்ளது. இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு ஐதராபாத் போலீசுக்கு அது உத்தரவிட்டுள்ளது. வழக்கில் தொடர்புடைய சாதுதீன் மாலிக்கும், 2 சிறுவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள மேலும் 2 பேரை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். இதன் மூலம் இந்த வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.


Next Story