டெல்லி விமான நிலையத்தில் 45 கைத்துப்பாக்கிகளுடன் கணவன்-மனைவி கைது


டெல்லி விமான நிலையத்தில் 45 கைத்துப்பாக்கிகளுடன் கணவன்-மனைவி கைது
x

தேசிய பாதுகாப்பு படையினர் அந்த துப்பாக்கிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.

புதுடெல்லி,

வியட்நாமின் ஹோசி மின் நகரில் இருந்து டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த விமானத்தில் ஒரு தம்பதியர் தங்களது கைக்குழந்தையுடன் வந்திறங்கினர். விமான நிலையத்துக்குள் இருந்து வெளியே செல்லும் வழியில் மற்றொரு நபர் 2 "டிராலி பேக்"குகளை பெண்ணின் கணவரிடம் கொடுத்துவிட்டு சென்றார். அவர்களது நடவடிக்கைகளை போலீசார் கண்காணித்துக் கொண்டே இருந்தனர். தம்பதியினரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது.

இந்த நிலையில் தம்பதியர், விமான நிலையத்தில் இருந்து வெளியேறும் நுழைவு வாயில் பகுதியில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி பைகளை சோதனை செய்தபோது அதில் 45 கைத்துப்பாக்கிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து சுங்க அதிகாரிகளுக்கும், தேசிய பாதுகாப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தேசிய பாதுகாப்பு படையினர் அந்த துப்பாக்கிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், தம்பதியரின் பெயர் ஜக்ஜித்சிங் - ஜஸ்வந்தர் கவுர் என்பதும், அவர்களிடம் பைகளை ஒப்படைத்த நபர் ஜக்ஜித் சிங்கின் சகோதரர் மஞ்சித்சிங் என்பதும் தெரியவந்தது. மஞ்சித்சிங், பாரீஸ் நகரில் இருந்து வந்து, பைகளை இவர்களிடம் ஒப்படைத்துவிட்டு நைசாக விமான நிலையத்தில் இருந்து வெளியேறி விட்டார். பைகளில் இருந்த துப்பாக்கிகளின் மதிப்பு ரூ.22.5 லட்சம் என கூறப்படுகிறது.

இந்த தம்பதியர் ஏற்கனவே துருக்கியில் இருந்து 25 துப்பாக்கிகளை கடத்தி வந்ததாகவும், அப்போது பிடிபடவில்லை எனவும் தெரிவித்து உள்ளனர். இவர்களை தேசிய பாதுகாப்பு படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story