அரசு கஜானா கொள்ளை போகும்போது அமைதியாக எப்படி இருப்பது? கேரள கவர்னர் கேள்வி


அரசு கஜானா கொள்ளை போகும்போது அமைதியாக எப்படி இருப்பது? கேரள கவர்னர் கேள்வி
x

அரசு கஜானா பணம் கொள்ளை போகும்போது அமைதியாக எப்படி இருப்பது? என கேட்டுள்ள கேரள கவர்னர் அனைத்து ஆவண சான்றுகளும் நாளை ஊடகங்களிடம் வெளியிடப்படும் என கூறியுள்ளார்.


திருவனந்தபுரம்,



கேரளாவில் பல்கலை கழகங்களின் நடவடிக்கைகளில் முதல்-மந்திரி தலையிடமாட்டேன் என உறுதியளித்து விட்டு, அதன் கட்டுப்பாட்டை கையில் எடுத்து கொள்ள அவர்கள் முயற்சித்து வருகின்றனர் என கவர்னர் ஆரிப் முகமது கான் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

இதேபோன்று, தகுதியல்லாத நபர்களை, தனக்கு வேண்டியவர்கள் என்ற அடிப்படையில் பதவியில் நியமித்து வருவதற்கும் அவர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

கேரளாவில் கண்ணூர் பல்கலை கழகத்தில் மலையாளம் துறையில் இணை பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்த 6 பேரில் ஒருவர் பிரியா வர்கீஸ். இவர், முதல்-மந்திரி பினராயி விஜயனின் தனி செயலாளரான கே.கே. ராகேஷ் என்பவரின் மனைவியாவார்.

இந்த பதவிக்கான தேர்வில் கலந்து கொண்ட 6 பேரில் பிரியா வர்கீசின் மதிப்பெண்கள் மிக மோசம் என்ற அளவில் இருந்துள்ளன. எனினும், துணை வேந்தர் தலைமையிலான கமிட்டி நடத்திய நேர்காணலுக்கு பின்னர், தர வரிசை பட்டியலில் அவர் முன்னிலை பெற்றார்.

இவை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட விவரங்களின் அடிப்படையில் தெரிய வந்துள்ளது. இந்த பதவிக்கான வேட்பாளர்களில் ஒருவரான ஜோசப் ஸ்கேரியா, 651 மதிப்பெண்களுடன் இறுதி தரவரிசை பட்டியலில் 2-வது இடம் பிடித்துள்ளார். ஆனால், பிரியா வர்கீஸ் 156 மதிப்பெண்களை மட்டுமே பெற்றுள்ளார். எனினும், தரவரிசையில் முன்னிலையில் இடம் பிடித்துள்ளார்.

இதனை தொடர்ந்து, மாநில பல்கலை கழகங்களுக்கான வேந்தரான கேரள கவர்னர் ஆரிப் முகமது கான், கடந்த ஆகஸ்டில் பிரியாவின் நியமனத்திற்கு இடைக்கால தடை விதித்து விட்டார். குடும்ப உறவுமுறைகளுக்கு பதவி வழங்கும் அதிகார முறைகேடு நடைபெறுகிறது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இதற்கு எதிராக பல்கலை கழகத்தின் சிண்டிகேட் சார்பில் கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரணைக்கு எடுத்து கொண்ட ஐகோர்ட்டு, பிரியா வர்கீசின் நியமனத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது கவனத்திற்குரியது.

இந்நிலையில், கேரள கவர்னர் இன்று கூறும்போது, மந்திரிகளின் தனி உதவியாளர்கள் ஆயுள் முழுவதற்கும் பென்சன் பெறுவதற்கான வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இது ஒரு வகையில் கொள்ளை அடித்தல் ஆகும்.

அரரசாங்கத்தின் கஜானா பணம் கொள்ளை போகும்போது அதனை பார்த்து கொண்டு அமைதியாக எப்படி இருப்பது? என கேட்டுள்ள கேரள கவர்னர் அனைத்து ஆவண சான்றுகளும் நாளை ஊடகங்களுக்கு காட்டப்படும் என கூறியுள்ளார்.

இதேபோன்று, 3 ஆண்டுகளுக்கு முன்பு தன் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், கேரள போலீசார் வழக்கு கூட பதிவு செய்யாமல் உள்ளனர் என குற்றச்சாட்டு கூறியுள்ள கவர்னர் ஆரிப், இந்த விவகாரத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கும் தொடர்பு உள்ளது என்றும் உள்துறை மந்திரி பதவியையும் வகித்து வரும் அவரது தனிப்பட்ட உத்தரவின் பேரிலேயே போலீசார் அதுபற்றிய வழக்கு பதிவு செய்யாமல் உள்ளனர் என்றும் ஊடகங்களிடம் குற்றச்சாட்டாக கவர்னர் கூறியுள்ளார்.


Next Story