காங்கிரஸ் தலைவர் தேர்தல்: கர்நாடகாவில் வாக்களிக்கிறார் ராகுல்காந்தி...!


காங்கிரஸ் தலைவர் தேர்தல்: கர்நாடகாவில் வாக்களிக்கிறார் ராகுல்காந்தி...!
x

காங்கிரஸ் கட்சித் தலைவருக்கான தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், ராகுல் காந்தி கர்நாடகாவிலிருந்து தனது வாக்கை செலுத்த இருக்கிறார்.

பெங்களூரு,

காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி தற்போது இந்திய ஒற்றுமை யாத்திரை 'பாரத் ஜோடோ' நடைபயணத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நாளை காங்கிரஸ் கட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனிடையே நடைபயணத்திலிருக்கும் ராகுல் காந்தி கர்நாடகா மாநிலம் பல்லாரியிலிருந்து வாக்களிப்பார் என கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், 'காங்கிரஸ் தலைவருக்கான தேர்தலில் நாளை ராகுல் காந்தி எங்கு வாக்களிப்பார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக எந்த ஊகமும் தேவையில்லை. கர்நாடகா மாநிலம் பல்லாரியில் உள்ள சங்கனக்கல்லு பாரத் ஜோடோ முகாமிலிருந்து பிசிசி பிரதிநிதிகளான சுமார் 40 பாரத் ஜோடோ யாத்ரிகளுடன் ராகுல் காந்தி வாக்களிப்பார்'' எனப் பதிவிட்டுள்ளார்.

22 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை நடைபெற உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவிக்கான தேர்தலில் கட்சியின் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் சசி தரூர் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. நாளை பதிவான வாக்குகள் அக்டோபர் 19ஆம் தேதி எண்ணி முடிவுகள் அறிவிக்கப்படும்.


Next Story