குதிரை பேரம்...? காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை தங்க வைக்க, அவசர அவசரத்தில் ஓட்டலில் 50 அறைகள் ஏற்பாடு


குதிரை பேரம்...? காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை தங்க வைக்க, அவசர அவசரத்தில் ஓட்டலில் 50 அறைகள் ஏற்பாடு
x

வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் குதிரை பேரத்தில் சிக்கி விடாமல் இருக்க அவர்களை தங்க வைக்க ஓட்டலில் 50 அறைகளை காங்கிரஸ் கட்சி முன்பதிவு செய்து உள்ளது.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தல் கடந்த 10-ந்தேதி ஒரே கட்டத்தில் நடந்து முடிந்த நிலையில், இதன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், காங்கிரஸ் கட்சி 138 இடங்களிலும், பா.ஜ.க. 62 இடங்களிலும் மற்றும் ம.ஜ.த. 20 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.

இதன் மூலம் முன்னிலையில் உள்ள காங்கிரஸ் கர்நாடகாவில் தனிப்பெரும்பான்மையுன் ஆட்சி அமைக்க உள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

இதனிடையே கர்நாடகாவின் அடுத்த முதல் மந்திரி யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சி இதுவரை முதல் மந்திரி வேட்பாளரை அறிவிக்காத நிலையில், கர்நாடக காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே. சிவக்குமார் மற்றும் சித்தராமையா ஆகியோர் இடையே முதல் மந்திரி பதவிக்கான போட்டி நிலவுகிறது. முதல்-மந்திரி பதவியை கட்சி வழங்கினால் ஏற்று கொள்வேன் என்று முன்னாள் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் கூறியுள்ளார்.

இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்று தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களுடன் நடைபெறும் கூட்டத்தில், முதல்-மந்திரி வேட்பாளர் பற்றிய அவர்களின் கருத்துகளை, கட்சி தலைவர் கார்கே கேட்டு பெறுவார் என கூறப்படுகிறது.

காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மைக்கான எண்ணிக்கையை விட கூடுதலான இடங்களில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. அதனால், கர்நாடகாவில் அரசமைக்கும் அனைத்து வேலைகளிலும் அக்கட்சி ஈடுபட்டு வருகிறது.

இதன்படி, வாக்கு எண்ணிக்கையில் முன்னிலையில் உள்ள மற்றும் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பெங்களூருவுக்கு இன்றிரவு வரும்படி காங்கிரஸ் கட்சி கேட்டு கொண்டு உள்ளது.

வெற்றி பெறும் வேட்பாளர்களை பெங்களூருவில் உள்ள தங்கும் விடுதியில் அவர்களை தங்க வைக்க முடிவு செய்தது. இதுபற்றிய ஆலோசனையில் முதலில், தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெறாத சூழலில், எம்.எல்.ஏ.க்களை குதிரை பேரத்தில் சிக்கி விடாமல் பாதுகாக்க ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகருக்கு அழைத்து செல்ல கட்சி பரிசீலனை செய்து வந்தது.

ஆனால், இன்று காணப்படும் சூழலில் கட்சி பெரும்பான்மை பெற கூடிய அளவில் முன்னிலையில் உள்ளது. அதனால், எம்.எல்.ஏ.க்களை பெங்களூரு அருகே உள்ள ரிசார்ட்டிலேயே தங்க வைப்பது என்று கட்சி தலைமை முடிவு செய்து உள்ளது.

மராட்டிய தேர்தலில், நடந்தது போன்ற சூழலை தடுக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக பெங்களூருவின் சிலிகான் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள ஹில்டன் ஓட்டலுக்கு அவர்கள் கொண்டு செல்லப்படலாம் என்றும் வேறு சிலர், பிடதி நகரில் உள்ள ஈகிள்டன் தங்கும் விடுதிக்கு கொண்டு செல்லப்படலாம் என்றும் கூறுகின்றனர். குதிரை பேரம் ஏற்படாமல் தடுப்பதற்காக 50 அறைகளை காங்கிரஸ் கட்சி முன்பதிவு செய்து விட்டது என்றும் கூறப்படுகிறது.


Next Story