ஹனி டிராப்... பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த வழக்கு; டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானிக்கு மே 15 வரை போலீஸ் காவல்


ஹனி டிராப்... பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த வழக்கு; டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானிக்கு மே 15 வரை போலீஸ் காவல்
x
தினத்தந்தி 9 May 2023 5:03 PM IST (Updated: 9 May 2023 5:05 PM IST)
t-max-icont-min-icon

பாகிஸ்தானுக்கு ஆதரவாக உளவு பார்த்த வழக்கில் டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானிக்கு மே 15 வரை போலீஸ் காவல் விதிக்கப்பட்டு உள்ளது.

புனே,

மராட்டியத்தின் புனே நகரில் மத்திய ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகத்தின் (டி.ஆர்.டி.ஓ.) ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பிரிவில் (பொறியியலாளர்கள்) தலைவராக பதவி வகித்தவர் பிரதீப் குருல்கார் (வயது 59). இவர் பாகிஸ்தான் நாட்டு அமைப்புகளுக்கு தகவலை பகிர்ந்து உள்ளார் என்ற குற்றச்சாட்டின் பேரில் மராட்டிய பயங்கரவாத ஒழிப்பு படை அவரை சமீபத்தில் கைது செய்தது.

இதற்காக அவர் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணமும் மேற்கொண்டு உள்ளார் என கூறப்படுகிறது. அதுபற்றிய விசாரணையும் நடந்து வருகிறது. இதனை தொடர்ந்து பயங்கரவாத ஒழிப்பு படைக்கான (ஏ.டி.எஸ்.) கோர்ட்டில் அதற்கான ஆவணங்களை அதிகாரிகள் சமர்ப்பித்து உள்ளனர்.

சமீபத்தில் அவர் அந்த பதவியில் இருந்து விலகி உள்ளார். அணு ஆயுதம் சுமந்து செல்லும் திறன் பெற்ற அக்னி ஏவுகணை திட்டம் உள்பட பல்வேறு ஏவுகணை திட்டங்களில் அவர் முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகளை எடுக்கும் பணியில் முக்கிய பங்காற்றி வந்து உள்ளார்.

வருகிற நவம்பரில் அவர் ஓய்வு பெற உள்ள நிலையில், இயக்குநர் அந்தஸ்திலான பதவியில் இருந்து சில நாட்களுக்கு முன் புனே நகரிலுள்ள மற்றொரு டி.ஆர்.டி.ஓ. பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளார் என அதிகாரி கூறியுள்ளார்.

கடந்த வியாழ கிழமை புனே கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்ட அவருக்கு இன்று வரை பயங்கரவாத ஒழிப்பு படையின் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இந்த காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், புனே நகர சிறப்பு ஏ.டி.எஸ். கோர்ட்டில் அவர் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். ஹனி டிராப் முறையில் உளவு தகவல்களை பகிர்ந்த அவருக்கு மே 15-ந்தேதி வரை ஏ.டி.எஸ். காவல் விதிக்கப்பட்டு உள்ளது.

அவரிடம் இருந்து லேப்டாப், ஹார்டு டிஸ்குகள் உள்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அவை தடய அறிவியல் சோதனைக்கு கொண்டு செல்லப்பட்டன.

அவர், பாகிஸ்தானிய உளவு அமைப்பை சேர்ந்த பெண்ணுடன் தொடர்ந்து, தொடர்பில் இருந்து வந்ததுடன், வாட்ஸ்அப் செய்திகள், குரல் மற்றும் வீடியோ கால்கள் வழியேயும் ரகசிய செய்திகளை பகிர்ந்து வந்து உள்ளார் என தெரிய வந்து உள்ளது.


Next Story