'கெஜ்ரிவாலின் யூகம் அது' அமலாக்கத்துறை கோரிக்கையை நிராகரித்த சுப்ரீம் கோர்ட்டு


கெஜ்ரிவாலின் யூகம் அது அமலாக்கத்துறை கோரிக்கையை நிராகரித்த சுப்ரீம் கோர்ட்டு
x
தினத்தந்தி 17 May 2024 7:44 AM IST (Updated: 17 May 2024 7:50 AM IST)
t-max-icont-min-icon

நிபந்தனைகளை அரவிந்த் கெஜ்ரிவால் மீறி வருவதால் அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று அமலாக்கத்துறை கோர்ட்டில் வலியுறுத்தியது.

புதுடெல்லி,

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21-ந் தேதி கைது செய்யப்பட்டார். ஏப்ரல் 1-ந் தேதி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக அவருக்கு கடந்த 10-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு பல்வேறு நிபந்தனைகளுடன் இடைக்கால ஜாமீன் அளித்தது. ஜூன் 1-ந் தேதிவரை இடைக்கால ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது. 2-ந் தேதி அவர் சிறைக்கு திரும்ப வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், தான் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு, சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, திபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ''இடைக்கால ஜாமீன் பெற்ற அரவிந்த் கெஜ்ரிவால், தனது கட்சிக்கு மக்கள் ஓட்டளித்தால், தான் ஜூன் 2-ந் தேதிக்கு சிறைக்கு செல்ல வேண்டி இருக்காது என்று தேர்தல் பிரசாரங்களில் பேசி வருகிறார்'' என்று குற்றம் சாட்டினார்.

அதற்கு நீதிபதிகள், ''அது அவரது யூகம். நாங்கள் எதுவும் சொல்ல முடியாது. அவர் எப்போது சரணடைய வேண்டும் என்பது பற்றிய எங்கள் உத்தரவு தெளிவானது. அது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு. இந்த உத்தரவின் மூலம் சட்டத்தின் ஆட்சி நிர்வகிக்கப்படும்'' என்று கூறினர்.

துஷார் மேத்தா, ''கெஜ்ரிவால் ஜாமீன் நிபந்தனையை மீறி விட்டார். அவர் உணர்த்த விரும்புவது என்ன? இது, சுப்ரீம் கோர்ட்டின் முகத்தில் விழுந்த அடி போன்றது. அவரது இடைக்கால ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்'' என்று தெரிவித்தார். ஆனால் ஜாமீனை ரத்து செய்ய நீதிபதிகள் மறுத்து விட்டனர்.நீதிபதி சஞ்சீவ் கன்னா, ''கெஜ்ரிவால் 2-ந் தேதி சரணடைய வேண்டும் என்ற கோர்ட்டு உத்தரவு தெளிவானது. வழக்கு பற்றி பேசக்கூடாது என்று நாங்கள் எதுவும் சொல்லவில்லை'' என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து, அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் அபிஷேக் சிங்வி, மக்கள் ஓட்டுப்போடாவிட்டால் சிறைக்கு செல்ல வேண்டி இருக்கும் என்று கெஜ்ரிவால் பேசவில்லை என்று மறுப்பு தெரிவித்தார். அத்துடன், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் பெயரை குறிப்பிடாமல் ஒரு குற்றச்சாட்டு தெரிவித்தார்.

''கெஜ்ரிவாலுக்கு சிறப்பு சலுகை காட்டப்பட்டதாக ஒரு மூத்த மத்திய மந்திரி சொல்கிறார்'' என்று அவர் கூறினார். அதற்கு நீதிபதிகள், ''அதுபற்றி நாங்கள் விசாரிக்க முடியாது'' என்று தெரிவித்தனர்.மேலும், நீதிபதிகள் கூறியதாவது:-நாங்கள் யாருக்கும் விதிவிலக்கு அளிக்கவில்லை. நாங்கள் நியாயம் என்று கருதியதையே தீர்ப்பில் சொல்லி இருக்கிறோம். அதே சமயத்தில், தீர்ப்பு பற்றிய விமர்சனரீதியான ஆய்வுகள் வரவேற்கப்படுகின்றன.இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story