இந்து மகன், முஸ்லிம் மகள்... தாயார் இறுதி சடங்கை யார் நடத்துவது? நள்ளிரவில் வாக்குவாதம்
ஐதராபாத்தில் தங்களது தாயார் இறுதி சடங்கை நடத்த உரிமை கோரி, வாக்குவாதத்தில் ஈடுபட்ட இந்து மகன் மற்றும் முஸ்லிம் மகளை போலீசார் பேசி, சமரசம் செய்து வைத்தனர்.
ஐதராபாத்,
தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் மதனப்பேட்டை பகுதியில், தரப் ஜங் காலனியில் வசித்து வந்த 95 வயது மூதாட்டி நேற்று மாலை காலமானார். இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அவர்களில் ஒரு மகன் முன்பே மரணம் அடைந்து விட்டார்.
இந்த நிலையில், அவரது இறுதி சடங்கை நடத்துவதில் மகன் மற்றும் மகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதுபற்றி மகள் கூறும்போது, எனது தாயாரை 12 ஆண்டுகளாக பராமரித்து வந்துள்ளேன்.
சமீபத்தில் அவருக்கு ரூ.5 லட்சம் செலவில் அறுவை சிகிச்சையும் செய்து முடித்தேன். ஒருவரும் உதவிக்கு வரவில்லை என கூறியுள்ளார். அந்த மூதாட்டியின் 60 வயதுடைய மகள் இஸ்லாமிய மதத்திற்கு மாறியுள்ளார்.
கடந்த ஜனவரியில் அந்த மூதாட்டியும் மதம் மாறி விட்டார் என்று கூறி, அதற்கான வீடியோ, ஆவணங்கள் உள்ளிட்டவற்றை போலீசாரிடம் மகள் காண்பித்து உள்ளார். தனது மறைவுக்கு பின் யாரும் வரமாட்டார்கள் என்றும், இறுதி சடங்கை நமது சடங்குபடி செய்ய வேண்டும் என கேட்டு கொண்டார் என மூதாட்டியின் மகள் கூறியுள்ளார்.
இதனால், நேற்றிரவு அந்த பகுதியில் சண்டை, சச்சரவு ஏற்பட்டு அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தெரிவித்தனர். போலீசாரும் அப்பகுதியில் குவிக்கப்பட்டு உள்ளனர்.
இதுபற்றி மதனப்பேட்டை காவல் நிலையத்தின் உயரதிகாரி ஜனையா கூறும்போது, இது ஒரு குடும்ப விவகாரம். அதனால், குடும்பத்திற்குள்ளேயே பேசி விவகாரம் முடிக்கப்பட்டது. ஒரு பதற்றமும் இல்லை. சகோதரரும், சகோதரியும் சமரசம் செய்து கொண்டனர் என கூறியுள்ளார்.
இதன்படி, இரவு 11.45 மணியளவில் நடந்த சமரச முயற்சியானது, நள்ளிரவு 1.30 வரை தொடர்ந்து உள்து. அதன்பின்னர், போலீசார் இரு தரப்பினரையும் ஒரு வழியாக சமரசத்திற்கு கொண்டு வந்து முடிக்கும்போது, இரவு 2.30 மணியாகி விட்டது.
இதனை தொடர்ந்து, இறுதி வணக்க நிகழ்ச்சி மகளின் வீட்டில் நடத்தி முடிக்கப்பட்டது. அதன்பின்னர், அந்த பெண்ணின் உடலானது மகனின் குடும்பத்தினரிடம் தகனத்திற்காக ஒப்படைக்கப்பட்டு விசயம் முடித்து வைக்கப்பட்டு உள்ளது.