இமாசல பிரதேச சட்டசபை தேர்தல்; தபால் வாக்கு செலுத்திய 106 வயது முதியவர்


இமாசல பிரதேச சட்டசபை தேர்தல்; தபால் வாக்கு செலுத்திய 106 வயது முதியவர்
x

இமாசல பிரதேச சட்டசபை தேர்தலுக்கான தபால் வாக்கை இந்தியாவின் முதல் வாக்காளரான 106 வயது முதியவர் செலுத்தியுள்ளார்.



சிம்லா,


இமாசல பிரதேச சட்டசபை தேர்தல் வருகிற 12-ந்தேதி தொடங்குகிறது. இதனை முன்னிட்டு தேர்தல் பிரசாரம் சூடு பிடித்து உள்ளது. ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

இமாசல பிரதேச சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8-ந்தேதி நடைபெறும். இந்த தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட 1.22 லட்சம் வாக்காளர்கள் தங்களுடைய வாக்கை செலுத்துகின்றனர். 100 வயது கடந்த 1,190 வாக்காளர்கள் உள்ளனர்.

அவர்கள் தபால் வாக்கு செலுத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளரான கின்னார் மாவட்டத்தில் வசிக்கும் 106 வயதுடைய ஷியாம் சரண் நேகி என்ற முதியவர் தபால் வாக்கை செலுத்தியுள்ளார்.

அவருக்கு தேர்தல் ஆணைய குழுவினர் சிவப்பு கம்பளம் கொண்டு வந்து முழு மரியாதை செலுத்தி வாக்கு பதிவு நடந்தது. அவர் முதலில், வாக்கு மையத்திற்கு சென்று வாக்கு செலுத்துவது என்பதிலேயே ஆர்வமுடன் இருந்துள்ளார்.

எனினும், திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டதனால், அவரது வீட்டில் வைத்து வாக்கு செலுத்தி உள்ளார். இவரை போன்ற வயது முதிர்ந்த வாக்காளர்கள் பலரும் தபால் வாக்குகளை செலுத்தி உள்ளனர்.

அவர்கள் தங்களது வாக்கை ஆர்வத்துடன் செலுத்தி, நாட்டில் ஜனநாயக கடமையை ஆற்றிய திருப்தியுடனும், மகிழ்ச்சியுடனும் உள்ளதுடன், இன்றைய இளைஞர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாகவும் இருக்கின்றனர்.


Next Story