இமாச்சல பிரதேசம்: அரசு அலுவலகம் கட்ட ரூ.20 லட்சம் மதிப்புள்ள நிலத்தை தானமாக வழங்கிய விவசாயி
ஒரு ரூபாய்கூட பெற்றுக்கொள்ளாமல் தனது நிலத்தை அரசுக்கு விவசாயி பாகீரத் சர்மா மாற்றிக்கொடுத்துள்ளார்.
பிலாஸ்பூர்,
இமாசல பிரதேச மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள கார்சி சவுக் பகுதியைச் சேர்ந்த முதிய விவசாயி பாகீரத் சர்மா (வயது 74). இங்கு கடந்த 2021-ம் ஆண்டு முதல், 'பட்வார் கர்' எனப்படும் அரசு கணக்கு அலுவலகம் ஓர் ஒற்றை அறையில் இயங்கிவந்தது. இந்நிலையில் அந்த அலுவலகம் கட்டுவதற்கு தனக்குச் சொந்தமான 3 ஏக்கர் விவசாய நிலத்தை தானமாக வழங்க பாகீரத் சர்மா முடிவெடுத்தார். அந்த நிலத்தின் இன்றைய சந்தை மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும்.
அந்த நிலத்தை, ஒரு ரூபாய்கூட பெற்றுக்கொள்ளாமல் அரசுக்கு விவசாயி பாகீரத் சர்மா மாற்றிக்கொடுத்துள்ளார். இங்கு புதிய அலுவலகம் கட்டப்படும்போது, 12 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 4 ஆயிரம் மக்கள் பயன்பெறுவர். எளிய பின்னணியைச் சேர்ந்த பாகீரத் சர்மா, விவசாயத்தை நம்பியே குடும்பத்தை நடத்துகிறார்.
இவர் தனது 4 மகள்களையும் திருமணம் செய்து கொடுத்துவிட்டார். இரு மகன்களில் ஒருவர், பெட்ரோல் விற்பனை நிலையம் ஒன்றில் தொழிலாளியாக பணிபுரிகிறார். மற்றொருவர் டாக்சி டிரைவராக உள்ளார். பொதுநல நோக்கில் தனது நிலத்தை தானமாக வழங்கிய முதிய விவசாயி பாகீரத் சர்மா, அரசு அதிகாரிகள், பொதுமக்களின் பாராட்டை ஒருசேரப் பெற்றுள்ளார்.