சிக்கிம் மாநிலத்தில் கடும் பனிப்பொழிவு: 1,000-க்கும் அதிகமான சுற்றுலா பயணிகளை மீட்டது இந்திய ராணுவம்


சிக்கிம் மாநிலத்தில் கடும் பனிப்பொழிவு: 1,000-க்கும் அதிகமான சுற்றுலா பயணிகளை மீட்டது இந்திய ராணுவம்
x
தினத்தந்தி 17 March 2023 7:26 AM IST (Updated: 17 March 2023 9:58 AM IST)
t-max-icont-min-icon

'ஆபரேஷன் ஹிம்ராஹத்' என்ற பெயரில் இந்திய ராணுவம் மேற்கொண்ட மீட்பு நடவடிக்கையில் 1,000-க்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் மீட்கப்பட்டனர்.

கேங்டாக்,

சிக்கிம் மாநிலத்தின் கிழக்கு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு, சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 12-ந்தேதி அங்குள்ள சாங்கு ஏரிக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகளின் வாகனங்களில் பனிப்பொழிவில் சிக்கிக்கொண்டன.

இதையடுத்து இந்திய ராணுவம் விரைந்து சென்று அங்குள்ள உள்ளூர் காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து சுமார் 370 சுற்றுலா பயணிகளை பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து பனியில் சிக்கிய வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து மீண்டும் இயங்கத் தொடங்கியது.

இந்த நிலையில் கிழக்கு சிக்கிமில் உள்ள மலைத்தொடர்களில் சுற்றுலா பயணிகள் பலர் பனிப்பொழிவு காரணமாக சிக்கிக் கொண்டனர். அவர்களை அங்கிருந்து மீட்கும் நடவடிக்கை தொடர்ந்து வந்த நிலையில், தற்போது வரை 1,000-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளை இந்திய ராணுவத்தினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.

'ஆபரேஷன் ஹிம்ராஹத்' என்ற பெயரில் இந்திய ராணுவம் மேற்கொண்ட மீட்பு நடவடிக்கையில், பெண்கள் மற்றும் குழந்தைகள் பலரும் மீட்கப்பட்டு பத்திரமான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தேவையான உணவு, மருத்துவ உதவிகள் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. சரியான நேரத்தில் உதவிக்கு வந்த இந்திய ராணுவத்திற்கு மாவட்ட நிர்வாகமும், சுற்றுலா பயணிகளும் நன்றி தெரிவித்துள்ளனர்.


Next Story