சிவமொக்காவில் கனமழை


சிவமொக்காவில் கனமழை
x

சிவமொக்காவில் இடைவிடாது கொட்டி தீர்த்த மழையால் 17 வீடுகள் இடிந்தன. மேலும் ஏராளமான வீடுகளில் வெள்ளம் புகுந்தது. மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

சிவமொக்கா

சிவமொக்காவில் இடைவிடாது கொட்டி தீர்த்த மழையால் 17 வீடுகள் இடிந்தன. மேலும் ஏராளமான வீடுகளில் வெள்ளம் புகுந்தது. மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கோடை மழை

கர்நாடகத்தில் கோடை மழை கொட்டி தீர்த்து வருகிறது. அதேபோல் சிவமொக்கா மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் ஒருநாள் முழுவதும் இடைவிடாது மழை கொட்டி தீர்த்தது. பலத்த மழையால் சிவமொக்கா டவுனில் உள்ள கோபாலகவுடா படாவனே, ஒசமனே, வெங்கடேசா நகர், வித்யா நகர் போன்ற பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தன. மேலும் அப்பகுதியில் உள்ள கால்வாயும் உடைந்ததால் தண்ணீர் வெளியேறி ஏராளமான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

இதுதவிர ஏராளமான இடங்களில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் குளம்போல தேங்கி நின்றது.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு

பலத்த மழையால் சிவமொக்கா டவுன் பகுதியில் நடந்து வந்த சீர்மிகு நகர திட்ட பணிகள் பாதிக்கப்பட்டன. ஆங்காங்கே தோண்டப்பட்ட பள்ளங்களில் மழைநீர் தேங்கி உள்ளதால் அங்கு அபாய எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. நகர் முழுவதும் இதுபோல் ஏராளமான இடங்களில் வைக்கப்பட்டு இருப்பதால் மக்கள் அவதி அடைந்துள்ளனர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

பலத்த மழை காரணமாக கடந்த 2 நாட்களாக பள்ளிக்கூடங்களுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்து இருந்தது. மேலும் சனி, ஞாயிறு வார விடுமுறை என்பதால் இனி 23-ந் தேதிதான் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் என்று ஏராளமான பள்ளிகள் அறிவித்துள்ளன.

17 வீடுகள் இடிந்தன

இதுதவிர அங்கன்வாடி மையங்களும் மூடப்பட்டுள்ளன. இடைவிடாது பெய்த மழையால் 4 ஆயிரம் டன் மக்காச்சோளம் நாசமாகி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 600 வீடுகளில் மழை வெள்ளம் புகுந்து முழுமையான அளவில் சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

17 வீடுகள் இடிந்துள்ளன. திடீரென வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்ததால் மக்கள் செய்வதறியாது திகைத்து போயினர். இந்த சந்தர்ப்பத்தில் வீடுகளில் இருந்த டி.வி., குளிர்சாதன பெட்டி உள்பட ஏராளமான மின்சாதன பொருட்கள் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களை அதிகாரிகள் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர். மேலும் ரப்பர் படகுகள் மூலம் மக்கள் மீட்கப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு தேவையான உதவிகளை அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

நேரில் ஆய்வு

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு சிவமொக்கா மாநகராட்சி நிர்வாகம் உணவு பொட்டலங்களை வழங்கி வருகிறது. மாவட்டத்தில் கனமழையால் 1,085 ஹெக்டேர் விளைநிலம் நாசமாகி இருப்பதாவும், 123 ஹெக்டேரில் உள்ள விவசாய தோட்டங்கள் நீரில் மூழ்கி இருப்பதாகவும், மேலும் பாக்கு, வாழை தோட்டங்கள் முற்றிலும் நாசமாகி இருப்பதாகவும் விவசாய துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் நேற்று காலையில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை முன்னாள் மந்திரி ஈசுவரப்பா எம்.எல்.ஏ., ராகவேந்திரா எம்.பி., மாவட்ட கலெக்டர் செல்வமணி, மேயர் சுனிதா அண்ணப்பா மற்றும் கவுன்சிலர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

அதிகாரிகளுக்கு உத்தரவு

அப்போது மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்கள் ஆறுதல் கூறி நிவாரண உதவி வழங்குவதாக உறுதி அளித்தனர். மேலும் போர்க்கால அடிப்படையில் நிவாரண பணிகளை மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.


Next Story