நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை:  கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால், கே.ஆர்எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

மண்டியா: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால், கே.ஆர்எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

கே.ஆர்.எஸ். அணை

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை மலைநாடு, கடலோர மாவட்டங்களில் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக கே.ஆர்.எஸ். அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு, மண்டியா, மைசூரு மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குடகு மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் குடகு மாவட்டம் குஷால்நகரில் உள்ள ஹாரங்கி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அந்த அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் எனும் கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து கடந்த சில நாட்களாக அதிகரித்த வண்ணம் இருந்தது.

வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடி நீர்

இதனால் அணையின் நீர்மட்டமும் படிப்படியாக உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை நிலவரப்படி 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 110.64 அடியாக இருந்தது.

அணைக்கு வினாடிக்கு 22 ஆயிரத்து 466 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது. அதே வேளையில் அணையில் இருந்து வினாடிக்கு 1,296 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் கே.ஆர்.எஸ். அணை முழுகொள்ளளவை எட்ட வாய்ப்பு இருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story