டெல்லியை சூழ்ந்த வெள்ளம் மக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பு; தொடர்ந்து மிரட்டும் கனமழை
யமுனை ஆற்றில் வெள்ளம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் மேலும் கனமழை பெய்ய வாய்ப்பு.
டெல்லி,
வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதன் காரணமாக பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இமாச்சல பிரதேசம், பஞ்சாப், அரியானா, டெல்லி, உத்திர பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் தலைநகர் டெல்லியில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை கொட்டித்தீர்த்தது. கனமழை காரணமாக யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றின் நீர் மட்டம் இன்னும் அபாய அளவிலேயே உள்ளது. இதன் காரணமாக டெல்லியில் பல பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நகரின் முக்கிய சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், பயணிகளுக்கு உதவவும் 4500க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளம் சூழ்ந்த இடங்களில் இருந்து மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப் பட்டுள்ளனர். பலரும் உணவுகள் இன்றி பசியில் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு சில தன்னார்வ அமைப்புகள் மற்றும் அதிகாரிகள் உணவுகளை வழங்கி உதவி வருகின்றனர்.
தற்போது மழை குறைந்துள்ளதால் யமுனை நதியின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. 24 மணி நேரத்தில் டெல்லி இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், டெல்லியில் மேலும் கனமழைக்கு தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மீண்டும் தொடர் மழை பெய்தால் டெல்லியின் நிலைமை மிகவும் மோசமடைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் இந்த அறிவிப்பு மக்களை பீதி அடைய வைத்துள்ளது.