அரியானாவில் கடும் பனிமூட்டம்: பாதுகாப்புக்கு வந்த கார் மீது துணை முதல்-மந்திரியின் கார் மோதியதால் பரபரப்பு
கடுமையான பனிமூட்டம் நிலவிய நிலையில் துணை முதல்-மந்திரியின் கார், பாதுகாப்புக்கு சென்ற வாகனத்துடன் மோதியது.
சண்டிகர்,
டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் பருவமழை முடிந்து, பனிக்காலம் தொடங்கியுள்ளது. இதனால், காலையிலேயே கடும் பனிமூட்டம் ஏற்பட்டு அது சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறது.
அந்த வகையில் அரியானா மாநிலத்திலும் தற்போது கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதன் காரணமாக வாகனங்கள் பகல் நேரத்திலேயே முகப்பு விளக்கை எரிய விட்டபடி பயணம் செய்கின்றன. அண்மையில் அரியானாவில் பனிமூட்டத்தால் சுமார் 30 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டிருந்தது. இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்தனர்.
இந்நிலையில் இன்று அரியானா மாநில துணை முதல்-மந்திரி துஷ்யந்த் சவுதாலா, தனது காரில் சிர்சா பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தார். அவரது காருடன் காவல்துறையினரின் பாதுகாப்பு வாகனங்களும் உடன் சென்றன.
அப்போது தந்தூர் கிராமம் அருகே அதிக பனிமூட்டம் நிலவியதால் துணை முதல்-மந்திரியின் கார், பாதுகாப்புக்கு சென்ற வாகனத்துடன் மோதியது. இந்த விபத்தில் துணை முதல்-மந்திரி துஷ்யந்த் சவுதாலா காயங்களின்றி தப்பினார். அதே சமயம் காவலர் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.