பெங்களூருவில் புதிய காங்கிரஸ் அலுவலகத்தையும் திறந்து வைக்கிறார்


பெங்களூருவில் புதிய காங்கிரஸ் அலுவலகத்தையும் திறந்து வைக்கிறார்
x

கோலார் மாவட்டத்தில் ராகுல்காந்தி கலந்து கொள்ள இருந்த பொதுக்கூட்டம் 9-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பெங்களூருவில் புதிய காங்கிரஸ் அலுவலகத்தை அவர் திறந்து வைக்க உள்ளார்.

பெங்களூரு:-

9-ந் தேதி ராகுல்காந்தி வருகை

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டு இருந்தது. இதனை கண்டித்து வருகிற 5-ந் தேதி கோலார் மாவட்டத்தில் 'சத்யமே ஜெயதே' என்ற பெயரில் பொதுக்கூட்டம் மற்றும் போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் அறிவித்திருந்தார்.

கோலார் மாவட்டத்தில் இருந்தே ராகுல்காந்தி சட்டசபை தேர்தல் பிரசாரத்தையும் தொடங்க இருந்தார். இந்த நிலையில், ராகுல்காந்தி வருகிற 5-ந் தேதி கர்நாடகத்திற்கு வருவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதாவது வருகிற 5-ந் தேதிக்கு பதிலாக கோலார் மாவட்டத்திற்கு வருகிற

9-ந் தேதி ராகுல்காந்தி வருகை தர உள்ளார். அன்றைய தினம் கோலாரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பங்கேற்று பேசுகிறார்.

புதிய காங்கிரஸ் அலுவலகம்

மேலும் 'சத்யமே ஜெயதே' போராட்டத்திலும் ராகுல்காந்தி கலந்து கொள்ள உள்ளார். கோலார் மாவட்டத்தில் கடந்த சட்டசபை தேர்தலில் போது நடந்த பிரசாரத்தின் போது பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசியதாக கூறி தான் குஜராத் கோர்ட்டில் ராகுல்காந்தி மீது வழக்கு தொடரப்பட்டு, 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருந்ததுடன், எம்.பி. பதவியும் பறிக்கப்பட்டு இருந்தது. இதனால் சத்யமே ஜெயதே போராட்டம் கோலாரில் வருகிற 9-ந் தேதி தொடங்குதாக காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

வருகிற 9-ந் தேதி கர்நாடகத்திற்கு வருகை தரும் ராகுல்காந்தி, பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் ரூ.20 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் புதிய அலுவலகத்தையும் திறந்து வைக்க உள்ளார். அந்த புதிய காங்கிரஸ் அலுவலகத்திற்கு பாரத் ஜோடோ பவன் என்று பெயர் சூட்டப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story