மும்பை ஐஐடி கல்லூரிக்கு ரூ.315 கோடி நன்கொடை வழங்கிய இன்போசிஸ் இணை நிறுவனர்
இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நந்தன் நீலேகணி, பாம்பே ஐஐடி-க்கு ரூ.315 கோடி நன்கொடை வழங்கி உள்ளார்.
மும்பை,
இன்போசிஸ் இணை நிறுவனரான நந்தன் நீலேகனி 1973 ம் ஆண்டு மும்பை ஐஐடியில் சேர்ந்து, எலெக்ட்ரிகல் இன்ஜீனியரிங் பிரிவில் பட்டம் பெற்றார். அக்கல்வி நிறுவனத்தில் இணைந்து 50 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு அவர், ரூ.315 கோடி நன்கொடையாக வழங்கி உள்ளார்.
மும்பை ஐஐடி.,யில் உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை வளர்ப்பதற்கும், பொறியியல் மற்றும் வளர்ந்து வரும் துறைகளில் ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்தை வளர்ப்பதற்கும் இந்த நன்கொடை அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தான் படித்த கல்வி நிறுவனத்திற்கு அதிக நன்கொடை அளித்தவர்கள் பட்டியலில் நந்தன் நீலேகனியும் இணைந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
எனது வாழ்க்கையின் அடித்தளமாக மும்பை ஐஐடி உள்ளது. எனது வளர்ச்சிக்கும், வாழ்க்கை பயணத்திற்கும் அடித்தளம் அமைத்துள்ளது. இந்த மதிப்பிற்குரிய நிறுவனத்துடனான எனது 50 ஆண்டுகால தொடர்பை நான் கொண்டாடுகிறேன். அந்த நிறுவனத்தின் எதிர்காலம் முன்னோக்கி செல்வதிலும், அதற்காக எனது பங்களிப்பை அளிப்பதற்கும் நான் பெருமைப்படுகிறேன். நாளை நமது உலகத்தை வடிவமைக்கும் மாணவர்களுக்கான அர்ப்பணிப்பு எனக்கூறியுள்ளார்.
இதற்கு முன்னர் இதே ஐஐடி கல்வி நிறுவனத்துக்கு 85 கோடி ரூபாய் வழங்கியுள்ளார். ஓட்டுமொத்தமாக 400 கோடி ரூபாயை அவர் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகத்தரம் வாய்ந்த வகையில் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், பொறியியல் & தொழில்நுட்பத்தின் வளர்ந்து வரும் பகுதிகளில் ஆராய்ச்சியை மேற்கொள்ளவும் இந்த நிதி பயன்படுத்தப்படும் என கூறப்படுகிறது.