நாடாளுமன்ற தேர்தலில் மைசூரு-குடகு தொகுதியில் போட்டியிட திட்டம்-எச்.விஸ்வநாத் எம்.எல்.சி. பேட்டி


நாடாளுமன்ற தேர்தலில் மைசூரு-குடகு தொகுதியில் போட்டியிட திட்டம்-எச்.விஸ்வநாத் எம்.எல்.சி. பேட்டி
x

நாடாளுமன்ற தேர்தலில் மைசூரு-குடகு தொகுதியில் போட்டியிட திட்டம் வகுத்துள்ளேன், பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் என எந்தவொரு கட்சி சார்பில் டிக்கெட் கிடைத்தாலும் போட்டியிடுவேன் என்று எச்.விஸ்வநாத் எம்.எல்.சி. கூறினார்.

மைசூரு:-

பா.ஜனதா மேலிடம்

கர்நாடக அரசியலில் மூத்த தலைவரும், மேல்சபை உறுப்பினருமான எச்.விஸ்வநாத் நேற்று மைசூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அடுத்த ஆண்டு(2024) ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் மைசூரு-குடகு தொகுதியில் இருந்து போட்டியிட நான் பா.ஜனதா மேலிடத்திடம் டிக்கெட் கேட்டு இருக்கிறேன்.

எந்த கட்சி சார்பில்...

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட நானும் ஆர்வமாக உள்ளேன். பா.ஜனதா மேலிடம் எனக்கு டிக்கெட் கொடுக்கவில்லை என்றால், காங்கிரசிடம் டிக்கெட் கேட்பேன். இந்த 2 கட்சிகளில் எந்த கட்சி சார்பில் டிக்கெட் கிடைத்தாலும் போட்டியிட தயாராக இருக்கிறேன். இனிவரும் நாட்களில் என்ன ஆகுமோ என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன்.

மைசூரு-குடகு நாடாளுமன்ற தொகுதியில் முதல்-மந்திரி சித்தராமையாவின் மகன் யதீந்திரா சித்தராமையா போட்டியிட இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. அது நல்லது தான். காங்கிரஸ் மேலிடம் என்ன முடிவு எடுப்பார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

போராடுவேன்

துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரும், நானும் நல்ல நண்பர்கள். இப்போது அவர் துணை முதல்-மந்திரி ஆகி இருக்கிறார். அவரை நான் சந்தித்து பேசினேன். இதில் என்ன தவறு இருக்கிறது?. காங்கிரஸ் கட்சியில் டிக்கெட் கிடைத்தால் நல்லது. இல்லையேல் பா.ஜனதாவிலேயே டிக்கெட் கேட்டு போராடுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story