புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ்குமார், சுக்பீர் சிங் சாந்து பதவியேற்பு


தினத்தந்தி 15 March 2024 10:40 AM IST (Updated: 15 March 2024 2:39 PM IST)
t-max-icont-min-icon

புதிய தேர்தல் ஆணையர்களை நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று உத்தரவிட்டார்.

புதுடெல்லி,

மக்களவைத் தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், கடந்த வாரம் தேர்தல் ஆணையர் அருண் கோயல் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

ஏற்கெனவே தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே ஓய்வுபெற்றதை தொடர்ந்து, அவரது பதவி காலியாக இருந்த நிலையில், தற்போது தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் மட்டுமே பதவியில் உள்ளார்.

இதனை தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையத்தில் புதிய ஆணையர்களாக ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர். புதிய தேர்தல் ஆணையர்களை நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று உத்தரவிட்டார்.

இந்த நிலையில், புதிய தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்பட்ட ஞானேஷ்குமார் மற்றும் சுக்பீர் சிங் சாந்து இருவரும் இன்று பதவியேற்றுக்கொண்டனர்.


புதிய தேர்தல் ஆணையர்களாக பதவியேற்றுள்ள ஞானேஷ்குமார், சுக்பீர் சிங் சாந்து ஆகிய இருவரும் 1988 பேட்சை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆவர். ஞானேஷ் குமார் கேரள பிரிவு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியாற்றியவர். சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டபோது காஷ்மீரை நிர்வகித்த அதிகாரிகளில் ஞானேஷ்குமாரும் இருந்தார்.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சுக்பீர் சிங் சாந்து, உத்தரகாண்ட் மாநில தலைமை செயலாளராக பணியாற்றியவர் ஆவார். மேலும், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தலைவர் உள்ளிட்ட பதவிகளையும் இவர் வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story