காற்று மாசுபாடு : குருகிராமில் துவக்கப்பள்ளிகள் மூடல்
துவக்கப்பள்ளிகள் மறு உத்தரவு வரும் வரை மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
சண்டிகர்,
தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தொடக்கப்பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 6 - 9 வகுப்புகள், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் வழியில் பாடங்கள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநில அரசு அலுவலகங்கள், நகராட்சி மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதர பணியாளர்கள் வீட்டில் இருந்து பணியாற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, டெல்லியின் அண்டை மாநிலமான அரியானாவிலும் காற்று மாசு அதிகரித்துள்ளது. குறிப்பாக டெல்லிக்கு அருகே உள்ள அரியானாவின் குருகிராமில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது. இதன் காரணமாக மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், காற்றுமாசு காரணமாக குருகிராமில் உள்ள நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளிகளுக்கு நாளை (நவ.7) முதல் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. நர்சரி முதல் 5 வரையிலான வகுப்புகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எஞ்சிய வகுப்புகளை ஆன்லைன் மூலம் நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.