குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு எதிராக செடல்வாட்டுடன் இணைந்து அகமது படேல் சதி செய்ததாக குற்றச்சாட்டு..!


குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு எதிராக செடல்வாட்டுடன் இணைந்து அகமது படேல் சதி செய்ததாக குற்றச்சாட்டு..!
x

கோப்புப்படம்

பிரதமர் மோடிக்கு எதிராக செடல்வாட்டுடன் இணைந்து அகமது படேல் சதி செய்ததாக குஜராத் போலீசார் தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லி,

கடந்த 2002-ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இந்த வழக்கில் பிரதமர் மோடி குற்றமற்றவர் என தீர்ப்பில் கூறப்பட்டது. போலி ஆதாரம் வைத்து வழக்கு தொடுத்ததாக குஜராத் சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செடல்வாட்டை அகமதாபாத் காவல்துறையின் குற்றப்பிரிவு வழக்குப் பதிவு செய்து கைது செய்தது.

டீஸ்டா செடல்வாட் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்குவதை எதிர்த்து, குஜராத் காவல்துறையின் சிறப்பு புலனாய்வுக் குழு, 2 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த காங்கிரஸ் தலைவர் அகமது படேல், டீஸ்டா செடல்வாட்டுடன் இணைந்து பிரதமர் மோடிக்கு எதிராக சதி செய்ததாக கோர்ட்டில் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு வருகிற திங்கள்கிழமை விசாரணைக்கு வருகிறது.

பாஜக அரசின் மூத்த தலைவர்களின் பெயர்களை கலவர வழக்குகளில் சிக்க வைப்பதற்காக டீஸ்டா செடல்வாட், காங்கிரஸ் கட்சியிடமிருந்து சட்டவிரோதமாக நிதி, வெகுமதிகள் மற்றும் பிற சலுகைகள் பெற்றதாக காவல்துறை கூறியுள்ளது.

இந்த சதி அகமது படேலின் தூண்டுதலின் பேரில் தான் நடந்தது என்பதற்கு ஆதாரமாக கலவரத்திற்குப் பிறகு படேல், செடல்வாட்டுக்கு ரூ. 30 லட்சம் கொடுத்தற்கான அறிக்கையை காவல்துறை சமர்ப்பித்துள்ளது.

படேல் மீதான இந்த குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடியுள்ளது. இது பிரதமர் மோடி குஜராத் முதல் மந்திரியாக இருந்தபோது கட்டவிழ்த்து விடப்பட்ட வகுப்புவாத படுகொலைகளின் பொறுப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்கான முயற்சி என்று காங்கிரஸ் கூறியுள்ளது. மேலும் பிரதமரின் அரசியல் பழிவாங்கும் இயந்திரம், மறைந்தவர்களைக் கூட விட்டுவைக்கவில்லை என்று கூறியுள்ளது.

பிரதமர் மோடியை சிக்க வைக்கும் சதிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியே உந்து சக்தி என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது. படேல் என்பது வெறும் பெயர். இந்த சதிக்கு உந்து சக்தியாக இருந்தவர் சோனியா காந்தி. மோடிக்கு எதிராக சோனியா காந்தி ஏன் சதி செய்கிறார் என்பது குறித்து செய்தியாளர் சந்திப்பு நடத்தி நாட்டு மக்களுக்கு உரையாற்ற வேண்டும் என்று செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறியுள்ளார்.


Next Story