200 கோடி ரூபாய் சொத்து: தானம் செய்து விட்டு துறவறம் செல்லும் தொழிலதிபர் குடும்பம்


200 கோடி ரூபாய் சொத்து: தானம் செய்து விட்டு துறவறம் செல்லும் தொழிலதிபர் குடும்பம்
x
தினத்தந்தி 16 April 2024 10:24 AM IST (Updated: 16 April 2024 12:12 PM IST)
t-max-icont-min-icon

துறவு கொள்பவர்கள் தங்களது சொத்துகளை துறந்து, நாடு முழுவதும் வெறுங்காலுடன் நடந்து யாசகம் பெற்று உயிர் வாழ்வர்.

அகமதாபாத்,

குஜராத் மாநிலம், ஹிம்மத் நகரைச் சேர்ந்தவர் பவேஷ் பண்டாரி. கட்டுமான தொழிலதிபரான இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகள், மகன் உள்ளனர். இவர்கள் ஜெயின் மதத்தைச் சேர்ந்தவர்கள். பவேஷ் பண்டாரியின் 19 வயது மகள், 16 வயது மகன் ஆகியோர் கடந்த 2022-ம் ஆண்டில் துறவறம் பூண்டனர்.

இந்த நிலையில், பவேசும் அவரது மனைவியும் தாங்களும் துறவறம் செல்ல உள்ளதாக கூறியுள்ளனர். தங்களிடம் உள்ள ரூ.200 கோடி மதிப்பிலான சொத்துகளை நன்கொடையாக வழங்கிய பவேஷ் பண்டாரி, இம்மாத இறுதியில் நடக்கும் நிகழ்வில் அதிகாரப்பூர்வமாக துறவு வாழ்க்கைக்குள் செல்கிறார்.

துறவு கொள்பவர்கள் தங்களது சொத்துகளை துறந்து, நாடு முழுவதும் வெறுங்காலுடன் நடந்து யாசகம் பெற்று உயிர் வாழ்வர். பெரும் கோடீஸ்வரரான பவேஷ் பண்டாரி குடும்பத்தின் துறவு முடிவு, குஜராத் மாநிலம் முழுவதும் கவனம் பெற்றுள்ளது.

முன்னதாக 2017-ஆம் ஆண்டு, மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பணக்கார தம்பதிகளான சுமித் ரத்தோர் மற்றும் அவரது மனைவி அனாமிகா ஆகியோர் தம்மிடம் இருந்த ரூ.100 கோடி சொத்துகளை நன்கொடை அளித்துவிட்டு, தங்கள் மூன்று வயது மகளை, அவர்களின் தாத்தா பாட்டியிடம் விட்டுவிட்டு துறவிகளாக மாறிய செய்தி நாடு முழுவதும் வைரலானது.


Next Story