உ.பி.யில் நுபுர் சர்மாவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவரின் வீடு இடிப்பு: சட்டத்திற்கு எதிரான செயல் - அலகாபாத் ஐகோர்ட்டில் மனு


உ.பி.யில் நுபுர் சர்மாவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவரின் வீடு இடிப்பு: சட்டத்திற்கு எதிரான செயல் - அலகாபாத் ஐகோர்ட்டில் மனு
x

Image Credit : PTI

வீடு இடிக்கப்பட்டது, சட்டத்திற்கு எதிரான செயல் என்று அலகாபாத் ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு அனுப்பப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ளது.

அலகாபாத்,

நுபுர் சர்மாவுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி உத்தரபிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த வெள்ளிக்கிழமை போராட்டம் நடைபெற்றது. அப்போது திடீரென வன்முறை ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து, போலீஸாருக்கும், வன்முறையாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. வன்முறை தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீஸ் கைது செய்தது.

இதனையடுத்து, மாநிலத்தின் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உ.பி முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதனை தொடர்ந்து, பிரயாக்ராஜில் ஏற்பட்ட வன்முறைக்குக் காரணமாக முக்கிய நபரான ஜாவேத் அகமதுவின் வீட்டை பிரயாக்ராஜ் வளர்ச்சி ஆணையம், போலீஸ் பாதுகாப்புடன் இடித்து தள்ளியது.

இந்த நிலையில், ஜாவித் அகமது வீடு இடிக்கப்படுவதற்கு எதிராக, அலகாபாத் ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு மின்னஞ்சல் மூலம் பிரயாக்ராஜ் வழக்கறிஞர்கள் குழு மனு ஒன்றை அனுப்பியுள்ளது.

அதில், நேற்று ஜேசிபி இயந்திரங்களால் இடிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர் ஜாவேத்தின் மனைவி பர்வீன் பாத்திமா என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

பாத்திமாவின் திருமணத்திற்கு முன்பு, அவளது பெற்றோரால் அந்த வீடு அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே அந்த வீட்டின் மீதும், நிலத்தின் மீதும் ஜாவித் அகமதுக்கு எந்த உரிமையும் இல்லை. எனவே வீடு இடிக்கப்பட்டது, சட்டத்திற்கு எதிரான செயல் என்று அலகாபாத் ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு நேற்று மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ளது.

வீடு இடிக்கப்பட்டதை நியாயப்படுத்தும் வகையில், ஜூன் 11ஆம் தேதியன்று அந்த வீட்டின் மீது பிரயாக்ராஜ் நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் ஒட்டியது. ஆனால், ஜாவித் அகமதுக்கோ அவரது மனைவிக்கோ விளக்க நோட்டீஸ் அனுப்படவில்லை.

சமூக சேவகர் அகமது ஜூன் 10 அன்று இரவு கைது செய்யப்பட்டார். மேலும் ஜூன் 11 அன்று குல்தாபாத் போலீஸ் ஸ்டேசனில் அவருக்கு எதிராக எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் எனத் தெரிகிறது.

இடிக்கப்பட்ட வீட்டின் உத்தேச மதிப்பு ரூ.5 கோடி இருக்கும் எனவும், ஜாவேத் அகமதுவின் குடும்ப உறுப்பினர்கள் சிலர் தங்கள் உடைமைகளில் சிலவற்றை சேகரித்துக்கொண்டு, வீட்டின் பின் கதவு வழியாக அந்த இடத்தை விட்டு வெளியேறினர். தற்போது வீட்டிற்குள் யாரும் இல்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


Next Story