அதிகார பேராசையால் வங்கித்துறையை சீரழித்த காங்கிரஸ் ஆட்சி - பிரதமர் மோடி
காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஆட்சியில் அதிகார பேராசை காரணமாக வங்கித்துறை சீரழிந்ததாக பிரதமர் மோடி கடுமையாக குற்றம் சாட்டி உள்ளார்.
பணி நியமன ஆணை
மத்திய அரசின் ரோஜ்கார் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 70 ஆயிரத்துக்கு அதிகமானோருக்கு நேற்று பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. இதில் பெரும்பாலானவர்களுக்கு வங்கித்துறையில் பணி வழங்கப்பட்டு உள்ளன. இந்த நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டு பிரதமர் மோடி ஆணைகளை வழங்கினார். பின்னர் உரையாற்றிய அவர், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியையும், சோனியா, ராகுல் குடும்பத்தையும் கடுமையாக குறை கூறினார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
போன் மூலம் கடன்
அதிகாரப் பேராசை தேச நலனை மீறும் போது ஏற்படும் அழிவுகளுக்கு பல உதாரணங்கள் உள்ளன. கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கீழ் நமது வங்கித்துறை இந்த அழிவை சந்தித்துள்ளது. முந்தைய ஆட்சியில் ஒரு குறிப்பிட்ட குடும்பத்துக்கு நெருக்கமான சில அதிகாரமிக்க அரசியல்வாதிகள், வங்கிகளுக்கு போன் செய்தே ஆயிரக்கணக்கான கோடி கடன்களை பெற்றனர். அவை ஒருபோதும் வங்கிகளுக்கு திரும்பவில்லை. இத்தகைய போன் வங்கி ஊழல், முந்தைய அரசின் மிகப்பெரிய ஊழல்களில் ஒன்றாக இருந்தது. இதனால் வங்கித்துறையின் முதுகெலும்பே உடைந்து விட்டது.
சீர்திருத்த நடவடிக்கை
ஆனால் வங்கி நிர்வாகத்தை வலுவாக்கியது, சிறிய வங்கிகளை இணைத்தது உள்பட கடந்த 9 ஆண்டுகளாக அரசு தொடர்ந்து சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டது. திவால் குறியீடு போன்ற சட்டங்களால், வங்கிகள் வாரா கடன்களில் இருந்து பாதுகாக்கப்பட்டன. வங்கிக்கடன் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது சொத்து முடக்கம் உள்பட கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களின் பணத்துக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அரசு ரூ.5 லட்சம் வரையிலான வங்கி வைப்புத்தொகைகளை காப்பீடு செய்துள்ளது. இத்தகைய தொடர் நடவடிக்கைகளின் காரணமாக இன்று வலிமையான வங்கித்துறையை கொண்டிருக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.