ராமர் சிலை பிரதிஷ்டை: பக்தர்கள் வெள்ளத்தில் அயோத்தி
பாலராமர் கண்களில் கட்டப்பட்டிருந்த துணி பூஜைகளுக்கு பிறகு அகற்றப்பட்டது. ராமர் சிலையை பிரதமர் மோடி வழிபாடு செய்தார்.
Live Updates
- 22 Jan 2024 12:50 AM IST
இன்று நடைபெறுகிறது அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்
உலகமே எதிர்பார்த்துக்கொண்டு இருந்த அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.
பல்வேறு ஆகம பூஜைகள் முடிந்த பிறகு, மதியம் 12.20 மணிக்கு கும்பாபிஷேகம் மற்றும் பால ராமர் சிலை பிரதிஷ்டை ஆகியவை நடைபெறும்.
ராமர், திரேத யுகத்தில் அபிஜித் முகூர்த்தத்தில் பிறந்தவர் ஆவார். அதனால், அபிஜித் முகூர்த்தத்தில் சிலை பிரதிஷ்டை நடக்கிறது.
பஞ்சாங்கப்படி, இன்றைய தினம் பவுஷ் மாதம் சுக்ல பட்சத்தின் துவாதசி திதி ஆகும். அபிஜித் முகூர்த்தத்துடன், சர்வார்த்த சித்தி யோகம், அமிர்த சித்தி யோகம், ரவி யோகம் ஆகியவையும் இந்த நாளில் அமைந்துள்ளன.
கும்பாபிஷேகத்தின்போது, ஹெலிகாப்டரில் இருந்து பூக்கள் தூவப்படும். தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த இசைக்கலைஞர்கள் மங்கல இசை இசைப்பார்கள்,
- 22 Jan 2024 12:36 AM IST
நின்ற கோலத்தில் செதுக்கப்பட்ட பால ராமர் சிலை
இதனிடையே கோவில் கருவறையில் வைப்பதற்கான 51 அங்குல உயரம் கொண்ட பால ராமர் சிலை, மைசூருவை சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் என்பவரால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ராஜ உடையில், நின்ற கோலத்தில் செதுக்கப்பட்ட பால ராமர் சிலை, வேத மந்திரங்கள் முழங்க, சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் கோவில் கருவறையில் வைக்கப்பட்டது.
தற்போது, சிலையில் கண்கள் மஞ்சள் துணியால் மூடிவைக்கப்பட்டு உள்ளது. சிலை பிரதிஷ்டை செய்யப்படும்போது துணி அகற்றப்படும்.
- 22 Jan 2024 12:18 AM IST
அயோத்தி கோவிலில் சிறப்பு பூஜைகள்
அயோத்தியில் ராமர் பிறந்த இடமாக கருதப்படும் இடத்தில் ராமர் கோவில் கட்ட கடந்த 2019-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது. அதைத்தொடர்ந்து, ராமர் கோவில் கட்டுமான பணிகளை கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு 5-ந் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
கட்டுமான பணிகள் ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை மேற்பார்வையில் நடந்து வந்தது. உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் அளித்த நன்கொடை மூலம் கோவில் கட்டுமான பணிகள் நடந்தது.
நாகரா பாணியில் கட்டப்பட்ட கோவில் வளாகம், 380 அடி நீளம், 250 அடி அகலம் மற்றும் 161 அடி உயரம் கொண்ட பிரமாண்டமாக உள்ளது.
கோவிலின் ஒவ்வொரு தளமும் 20 அடி உயரம் கொண்டது. மொத்தம் 392 தூண்கள் மற்றும் 44 வாயில்களை கொண்டுள்ளது.
கலையும், பாரம்பரியமும் கொண்ட இந்த பிரமாண்ட கோவிலின் கும்பாபிஷேகம் மற்றும் பால ராமர் சிலை பிரதிஷ்டை ஆகியவை இன்று (திங்கட்கிழமை) பகல் 12.20 மணிக்கு நடக்கிறது.
கும்பாபிஷேகத்துக்கான சிறப்பு பூஜைகள் கடந்த 16-ந் தேதி தொடங்கின. சரயு நதியில் இருந்து புனித நீர் நிரப்பப்பட்ட கலசங்கள், சிறப்பு பூஜைக்கு பிறகு ஊர்வலமாக கோவில் வளாகத்துக்கு எடுத்து வரப்பட்டன.
கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட யாகசாலையில் அந்த கலசங்கள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டு வருகிறது. 121 ஆச்சார்யார்கள் இந்த பூஜைகள் மற்றும் யாகங்களை நடத்தி வருகிறார்கள்.