பெண்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம்: அடுத்த மந்திரிசபை கூட்டத்தில் விண்ணப்பிக்கும் தேதி அறிவிக்கப்படும்; மந்திரி லட்சுமி ஹெப்பால்கர் பேட்டி
பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் தேதி குறித்து அடுத்த மந்திரிசபை கூட்டத்தில் முடிவு எடுத்து அறிவிக்கப்படும் என்று மந்திரி லட்சுமி ஹெப்பால்கர் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் தேதி குறித்து அடுத்த மந்திரிசபை கூட்டத்தில் முடிவு எடுத்து அறிவிக்கப்படும் என்று மந்திரி லட்சுமி ஹெப்பால்கர் தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு ரூ.2 ஆயிரம்
கர்நாடகத்தில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என்பது பற்றி அரசு இன்னும் உறுதியாக தெரிவிக்கவில்லை. இந்த திட்டத்திற்கு விண்ணப்பிப்பதும் தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பெங்களூருவில் நேற்று மாலையில் இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், பெண்கள் நலத்துறை மந்திரி லட்சுமி ஹெப்பால்கர் தலைமையில் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் மந்திரிகள் பிரியங்க் கார்கே, கிருஷ்ண பைரேகவுடா உள்ளிட்டடோரும் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டம் முடிந்ததும் மந்திரி லட்சுமி ஹெப்பால்கர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-
மந்திரிசபை கூட்டத்தில் முடிவு
பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து துணை முதல்-மந்திரி, மந்திரிகள் மற்றும் அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. தற்போது இலவச திட்டங்களுக்கு விண்ணப்பிக்க மக்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால், சேவா சிந்து செல்போன் செயலி, இணையதளம் சரியாக செயல்படாமல் இருக்கிறது. சர்வர் பிரச்சினை அடிக்கடி ஏற்படுகிறது. இந்த திட்டத்திற்காக தனியாக செல்போன் செயலி, இணையதள வசதியை தயார் செய்ய முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.
குறிப்பாக எளிமையான முறையில் பெண்களே அல்லது அவர்களது கணவரே செல்போன் மூலமாக இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அடுத்த வாரம் மந்திரிசபை கூட்டம் நடைபெற உள்ளது. அப்போது முதல்-மந்திரி சித்தராமையாவுடன் ஆலோசித்து பெண்களுக்கு ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்குவதற்கு விண்ணப்பிக்கும் தேதி குறித்து அறிவிக்கப்படும். ஆகஸ்டு மாதம் இந்த திட்டத்தை அமல்படுத்தி பெண்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.