அரசாங்கம் என்னைக் கொல்ல விரும்புகிறது - விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் ராகேஷ் திகாய்த்
அரசாங்கம் தன்னைக் கொல்ல விரும்புவதாக விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் ராகேஷ் திகாய்த் தெரிவித்துள்ளார்.
மீரட்,
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டத்தின் மூலம் அறியப்பட்டவர் ராகேஷ் திகாய்த். அகில இந்திய விவசாயிகள் கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளரான ராகேஷ் திகாய்த் மீது கடந்த மே மாதம் 30ஆம் தேதி கர்நாடகத்தில் தாக்குதல் சம்பவம் நடைபெற்றது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை மீரட்டில் நடைபெற்ற கிஷான் பஞ்சாயத்தில் கலந்து கொண்டு விவசாயிகள் மற்றும் யூனியன் உறுப்பினர்களின் மத்தியில் பேசிய ராகேஷ் திகாய்த், "எனது குடும்பம் விவசாயிகளின் குரலாக எப்போதும் ஒலிக்கும். தொடர்ந்து அதனை நான் செய்வேன். எந்த அழுத்தத்திற்கும் எனது குடும்பம் அடிபணியாது.
விவசாயிகள் சங்கத்தை கலைக்க அரசாங்கம் "நாசவேலை" அரசியலில் ஈடுபடுவதால், உட்கட்சி சண்டையில் நமது முக்கியமான நேரத்தை வீணடிக்க கூடாது. மேலும் கர்நாடகத்தில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் திட்டமிட்ட ஒன்று. ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த முன்னாள் ராணுவத் தளபதி விபின் ராவத்திற்கு அஞ்சலி செலுத்தச் சென்றபோது என்னை கொலை செய்ய முயற்சி நடந்தது.
சட்டசபை தேர்தலுக்கு முன், உத்தரபிரதேச அரசு நீர்ப்பாசனத்திற்கு இலவச மின்சாரம் வழங்குவதாக வாக்குறுதி அளித்தது, ஆனால் இப்போது குழாய் கிணறுகளில் மீட்டர் பொருத்தி விவசாயிகள் துன்புறுத்தப்படுகிறார்கள், இதை பொறுத்துக்கொள்ள முடியாது" என்று அவர் தெரிவித்தார்.