நகர்ப்புறங்களில் சொந்த வீடு கட்ட வங்கி கடன் சலுகை: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அறிவிப்பு


நகர்ப்புறங்களில் சொந்த வீடு கட்ட வங்கி கடன் சலுகை: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அறிவிப்பு
x
தினத்தந்தி 16 Aug 2023 3:25 AM IST (Updated: 16 Aug 2023 3:31 PM IST)
t-max-icont-min-icon

நகர்ப்புறங்களில் சொந்த வீடு கட்ட வங்கி கடன் வட்டியில் சலுகை அளிக்கும் புதிய திட்டத்தை சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அறிவித்தார்.

புதுடெல்லி,

டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றி வைத்து உரையாற்றினார். அவர் பேசியதாவது:- மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில வாரங்களில் நடந்த கலவரத்தால், பலர் உயிரிழந்துள்ளனர். தாய்மார்கள் மற்றும் மகள்களின் கவுரவம் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களில் அங்கு அமைதி திரும்பி உள்ளது. ஒட்டுமொத்த நாடும், மணிப்பூருடன் இருக்கிறது. அங்கு பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றன.

நகர்ப்புற வீட்டுக்கு வட்டி நிவாரணம்

நகர்ப்புறங்களில் சொந்த வீடு இன்றி, வாடகை வீடுகளில் வசிக்கும் நடுத்தர வகுப்பினருக்காக விரைவில் புதிய திட்டம் தொடங்கப்படும். அவர்கள் நகர்ப்புறங்களில் சொந்த வீடு கட்டுவதற்காக வங்கி கடனுக்கான வட்டியில் நிவாரணம் அளிக்கப்படும்.

பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கு இந்தியா முன்னுரிமை அளிக்கிறது. நாட்டில் மகளிர் சுயஉதவி குழுக்களில் 10 கோடி பெண்கள் உள்ளனர்.

டிரோன்கள்

மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு வேளாண்மை பணிக்கான டிரோன்கள் வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும். டிரோன்களை எப்படி இயக்குவது, எப்படி பழுது பார்ப்பது என்றும் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். முதல்கட்டமாக, 15 ஆயிரம் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு வேளாண்மைக்கான டிரோன்கள் வழங்கப்படும்.

கிராமங்களில் 2 கோடி பெண்களை லட்சாதிபதியாக பார்க்க வேண்டும் என்பது எனது கனவு. அதற்காக அவர்களுக்கு பிளம்பிங், எல்.இ.டி. பல்ப் உருவாக்குதல் போன்ற திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் 'லட்சாதிபதி சகோதரி' திட்டம் தொடங்கப்படும்.

மக்கள் மருந்தகங்கள்

விவசாயிகளுக்கு இதுவரை ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கோடி வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு ரூ.10 லட்சம் கோடி உர மானியம் அளிக்கப்பட்டுள்ளது. மலிவுவிலை ஜெனரிக் மருந்துகளை விற்பனை செய்ய மக்கள் மருந்தகங்களை மத்திய அரசு அமைத்துள்ளது. அவற்றின் எண்ணிக்கையை 10 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரமாக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. வெளியே ரூ.100-க்கு கிடைக்கும் மாத்திரை, அங்கு ரூ.10 அல்லது ரூ.15-க்கு விற்கப்படுகிறது.

விஸ்வகர்மா யோஜனா

அடுத்த மாதம், 'விஸ்வகர்மா யோஜனா' என்ற திட்டம் தொடங்கப்படும். முடி திருத்தும் தொழிலாளர்கள், பொற்கொல்லர்கள், துணி துவைப்பவர்கள் போன்ற பாரம்பரிய கைத்திறன் கொண்டவர்களுக்காக இத்திட்டம் தொடங்கப்படும்.

ரூ.13 ஆயிரம் கோடி முதல் ரூ.15 ஆயிரம் கோடி வரை ஒதுக்கப்படும்.

தாய்மொழியில் கற்பிப்பதற்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பின் முக்கிய பகுதியை மனுதாரர் பேசும் மாநில மொழியில் மொழிபெயர்த்து அளிக்க முடிவு செய்துள்ளது. அதற்காக சுப்ரீம் கோர்ட்டுக்கு நன்றி. இதன்மூலம், தாய்மொழியின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.

பணவீக்கம்

இளைஞர் சக்திதான் எனது பலம். இந்திய இளைஞர்களின் வலிமையை உலகம் பார்த்து வருகிறது. ஸ்டார்ட்அப் எனப்படும் புத்தொழில் நிறுவனங்கள் எண்ணிக்கையில் உலகின் 3-வது இடத்தை இந்தியா பெற்றுள்ளது.

கொரோனா காலத்தில், பொருட்களை இந்தியா இறக்குமதி செய்தபோது, பணவீக்கத்தையும் சேர்த்து இறக்குமதி செய்தது. மற்ற நாடுகளை விட பணவீக்கம் குறைவாக இருக்கிறது என்பதற்காக நாம் திருப்தி அடைய முடியாது. பணவீக்கத்தை மேலும் குறைக்க நாம் நடவடிக்கை எடுக்க வேண்டி உள்ளது. எனது முயற்சிகள் தொடரும் என்று அவர் பேசினார்.


Next Story