'பாரத் அரிசி'... மானிய விலையில் ஒரு கிலோ ரூ.29-க்கு விற்பனை - மத்திய அரசு அறிவிப்பு
முதல் கட்டமாக, சில்லறை சந்தை விற்பனைக்கு 5 லட்சம் டன் அரிசியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
புதுடெல்லி,
நாடு முழுவதும் அரிசியின் சில்லறை விற்பனை விலை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ள நிலையில் அடுத்த வாரம் முதல் மானிய விலையில் 'பாரத் அரிசி' என்ற பெயரில் ஒரு கிலோ அரிசி ரூ.29-க்கு விற்பனை செய்ய உள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய உணவுத்துறை செயலர் சஞ்சீவ் சோப்ரா கூறியதாவது:-
அரிசியின் பல்வேறு வகைகளின் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், கடந்த ஓராண்டில் அரிசியின் சில்லறை மற்றும் மொத்த விற்பனை விலை 15 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் அரிசியின் விலையைக் கட்டுப்படுத்த, இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு (NAFED) மற்றும் இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு (NCCF) மூலம் சில்லறை சந்தையில் மானிய விலையில் 'பாரத் அரிசி' என்ற பெயரில் ஒரு கிலோ ரூ.29-க்கு விற்பனை செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
'பாரத் அரிசி' அடுத்த வாரம் முதல் 5 கிலோ மற்றும் 10 கிலோ பைகளில் கிடைக்கும். முதல் கட்டமாக, சில்லறை சந்தை விற்பனைக்கு 5 லட்சம் டன் அரிசியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. அரசு ஏற்கனவே 'பாரத் ஆட்டா' என்ற பெயரில் கோதுமை ஒரு கிலோ ரூ.27.50-க்கும், 'பாரத் தால்' என்ற பெயரில் பருப்பு வகைகள் ஒரு கிலோ ரூ.60-க்கும் விற்பனை செய்து வருகிறது.
அரிசி ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகளை நீக்கும் திட்டம் அரசிடம் இல்லை. விலை குறையும் வரை கட்டுப்பாடுகள் தொடரும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அரிசி இருப்புகளை வெளியிட சில்லறை மற்றும் மொத்த விற்பனையாளர்களுக்கு அமைச்சகம் உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. அரிசி தவிர்த்து அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளும் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.