பயணிகளின் தொடர் புகார் எதிரொலி: விமான நிறுவன அதிகாரிகளுடன் மத்திய அரசு 8-ந்தேதி ஆலோசனை


பயணிகளின் தொடர் புகார் எதிரொலி: விமான நிறுவன அதிகாரிகளுடன் மத்திய அரசு 8-ந்தேதி ஆலோசனை
x

Image Courtacy: AFP

விமான பயணிகளின் குறைகளை களைவது தொடர்பாக விமான நிறுவன அதிகாரிகளுடன் மத்திய அரசு அடுத்த மாதம் (நவம்பர்) 8-ந்தேதி ஆலோசனை நடத்துகிறது.

புதுடெல்லி,

விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு நிறைவான சேவை வழங்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. ஆனால் சமீப காலமாக விமான சேவை தொடர்பாக பயணிகளிடம் இருந்து அதிகமான புகார்கள் வருகின்றன.

எனவே இந்த குறைகளை போக்குவது தொடர்பாக விமான நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள் மற்றும் பயண வலைத்தளங்களின் நிர்வாகிகளுடன் மத்திய அரசு அடுத்த மாதம் (நவம்பர்) 8-ந்தேதி ஆலோசனை நடத்துகிறது.

இந்த தகவலை மத்திய நுகர்வோர் நலத்துறை செயலாளர் ரோகித் குமார் சிங் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது:-

10 ஆயிரம் புகார்கள்

விமான பயண இடையூறு தொடர்பாக கடந்த ஓராண்டில் மட்டுமே சுமார் 10 ஆயிரம் புகார்கள் பயணிகளிடம் இருந்து வந்துள்ளன. இதில் பாதிக்கு மேற்பட்ட புகார்கள், ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கு பணம் திரும்ப வழங்காதது பற்றியது ஆகும்.

இதைப்போல இலவச கட்டாய இணைய செக்-இன் இருந்தபோதிலும், ஒவ்வொரு இருக்கையையும் பணம் செலுத்தியதாகக் காட்டுவதும் முக்கிய குற்றச்சாட்டாக உள்ளது. இவற்றை தவிர மேலும் ஏராளமான குற்றச்சாட்டுகள் உள்ளன.

நுகர்வோரின் இந்த குறைகளை அனைத்து விமான நிறுவனங்கள், பயண இணையதளங்கள் மற்றும் நுகர்வோர் அமைப்புகளுடன் விவாதிக்க நவம்பர் 8-ந் தேதி ஒரு ஆலோசனை கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.

சிரமத்துக்கு ஆளாகக்கூடாது

விமான நிறுவனங்களின் இணையதளங்கள் அல்லது பயண இணையதளங்கள் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, பல நுகர்வோர்கள் மகிழ்ச்சியடையவில்லை என்பதையும், அவர்கள் "தவறாக மற்றும் ஏமாற்றப்பட்டதாக" கருதுவதையும் அரசு கவனித்து வருகிறது.

ஒரு பயணி கட்டணத்தைச் செலுத்திவிட்டு, விமான நிறுவனங்கள் உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டை வழங்கியவுடன், அனைத்து சேவைகளும் நியாயமானதாகவும், நுகர்வோருக்கு சாதகமாகவும் இருக்க வேண்டும்.

விமான நிறுவனங்கள் அல்லது பயண நிறுவனங்களின் வணிக நடைமுறையுடன் அமைச்சகத்திற்கு எந்த தொடர்பும் இல்லை. ஆனால் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டை வைத்திருக்கும் ஒரு நுகர்வோர் எந்த நிலையிலும் சிரமத்திற்கு ஆளாக்கக்கூடாது என்று நாங்கள் கூறுகிறோம்.

விமான நிறுவனங்கள் மற்றும் டிராவல்ஸ் நிறுவனங்கள் நியாயமற்ற சில நடைமுறைகளில் ஈடுபடும்பட்சத்தில், அவர்கள் அதை தவிர்க்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

இவ்வாறு ரோகித் குமார் சிங் தெரிவித்தார்.


Next Story