தாவணகெரேயில் விபத்து இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
தாவணகெரேயில் விபத்துக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டுள்ளது.
சிக்கமகளூரு-
விபத்துக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டுள்ளது.
ரூ.2.82 கோடி இழப்பீடு
தாவணகெரேவை சோ்ந்தவா் சஞ்சய் பட்டீல். சாப்ட்வேர் என்ஜினீயரான இவர், கடந்த 2013-ம் ஆண்டு துமகூரு அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஹாவேரி பணிமனையை சேர்ந்த அரசு பஸ் ஒன்று சஞ்சய் பட்டீல் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் சஞ்சய் பட்டீல் உயிரிழந்தார்.
இதுகுறித்து தாவணகெரே கோர்ட்டில் இழப்பீடு கேட்டு சஞ்சய் பட்டீலின் மனைவி கவுரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சஞ்சயின் மனைவி கவுரிக்கு இழப்பீடாக ரூ.2.82 கோடி வழங்க வேண்டும் என்று கடந்த 2018-ம் ஆண்டு உத்தரவிட்டார். ஆனால் அப்போது ரூ.2 கோடி மட்டுமே ஹாவேரி பணிமனை சார்பில் வழங்கப்பட்டது.
அரசு பஸ் ஜப்தி
மீதமுள்ள தொகையை பலமுறை கேட்டாலும் ஹாவேரி பணிமனை அதிகாரிகள் எந்த பதிலும் அளிக்கவில்லை என தெரிகிறது. இதனால் கவுரி, தாவணகெரே கோர்ட்டில் மீண்டும் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதி, விபத்துக்கு இழப்பீடு வழங்காததால் ஹாவேரி பணிமனையை சேர்ந்த. பஸ்சை ஜப்தி செய்ய கோர்ட்டு ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.
அதன்படி நேற்று முன்தினம் பெங்களூருவில் இருந்து ஹாவேரி நோக்கி சென்ற ஹாவேரி பணிமனையை சேர்ந்த அரசு பஸ் தாவணகெரே பஸ் நிலையத்துக்கு வந்தது. அப்போது அந்த பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்தனர். பின்னர் பஸ்சை கோர்ட்டுக்கு கொண்டு சென்றனர். இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினார்கள்.