'நீட்' தேர்வை 2 கட்டமாக நடத்த மத்திய அரசு பரிசீலனை: அடுத்த கல்வியாண்டு முதல் அமல்..?


நீட் தேர்வை 2 கட்டமாக நடத்த மத்திய அரசு பரிசீலனை: அடுத்த கல்வியாண்டு முதல் அமல்..?
x

கோப்புப்படம்

நீட் தேர்வை, ஜே.இ.இ. நுழைவு தேர்வை போல் 2 கட்டமாக பிரித்து நடத்தலாம் என ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி,

கடந்த ஜூன் மாதம் 4-ம் தேதி வெளியான மருத்துவ இளங்கலை படிப்புக்கான 'நீட்' தேர்வு முடிவுகள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன. வினாத்தாள் கசிவால் ஏற்பட்ட இந்த பிரச்சினை குறித்த வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. அந்த தேர்வு முடிவுகள் ஏற்றுக்கொள்ளப்படுமா? இல்லையா? என்பது சுப்ரீம் கோர்ட்டின் கையில்தான் உள்ளது.

இந்த நிலையில், தேர்வை ஜே.இ.இ. நுழைவு தேர்வை போல் 2 கட்டமாக பிரித்து நடத்தலாம் என அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதாவது முதல்நிலை தேர்வு, இறுதித் தேர்வு என 2 கட்டங்களாக தேர்வை நடத்தலாமா? என ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதில் முதல்நிலை தேர்வு பேப்பர், பேனா (எழுத்து தேர்வு) முறையிலும், 2-ம் கட்ட அல்லது இறுதித்தேர்வு கணினி அடிப்படையிலும் இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும், இந்த 2 கட்ட தேர்வுகளையும் தனித்தனி முகமைகள் மூலம் நடத்துவது பற்றியும் ஆலோசனை நடந்து வருகிறது. அதாவது முதல் நிலை தேர்வை தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) மூலமும், இறுதித் தேர்வை தேசிய தேர்வு வாரியம் (என்.பி.இ.)அல்லது மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) அல்லது அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) மூலமும் நடத்தலாமா? என்பது பற்றியும் அதிகாரிகள் ஆலோசிக்கிறார்கள். இது இறுதி செய்யப்பட்டால் அடுத்த கல்வியாண்டில் இருந்து நீட் இளங்கலை தேர்வு 2 கட்டமாக நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story