வட கர்நாடகத்தில் புதிய கிராமங்களுக்கு மக்கள் வராததால் கட்டிடங்கள் சேதம்-மந்திரி கோவிந்த் கார்ஜோள் பேச்சு
வடகர்நாடகத்தில் புதிய கிராமங்களுக்கு மக்கள் வராததால் கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளதாக மந்திரி கோவிந்த் கார்ஜோள் கூறினார்.
பெங்களூரு:
வடகர்நாடகத்தில் புதிய கிராமங்களுக்கு மக்கள் வராததால் கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளதாக மந்திரி கோவிந்த் கார்ஜோள் கூறினார்.
கர்நாடக சட்டசபையில் வெள்ள பாதிப்புகள் குறித்து பேசும்போது, நீர்ப்பாசனத்துறை மந்திரி கோவிந்த் கார்ஜோள் குறுக்கிட்டு பேசியதாவது:-
மழைநீரில் மூழ்கின
கர்நாடகத்தில் கடந்த 2009-ம் ஆண்டு எடியூரப்பா முதல்-மந்திரியாக இருந்தபோது, 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வரலாறு காணாத மழை வடகர்நாடகத்தில் பெய்தது. இதனால் ஆற்றங்கரையோரம் இருந்த கிராமங்கள் மழைநீரில் மூழ்கின. அப்போது எடியூரப்பா தொழில் நிறுவனங்கள் மற்றும் அதிபர்களிடம் நன்கொடை பெற்று அந்த கிராமங்களை வேறு இடத்திற்கு மாற்ற முடிவு செய்தார்.
தனியாரிடம் நிலம் வாங்கி புதிய கிராமங்கள் உருவாக்கப்பட்டன. அங்கு வீடுகள் கட்டியதுடன் குடிநீர், சாலை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டன. அங்கு கிராம மக்கள் குடியேறினர். ஆனால் சிலர் தங்களின் சொந்த ஊரை விட்டு புதிய இடத்திற்கு குடியேறவில்லை. உணர்வு பூர்வமாக தாங்கள் பிறந்த வளர்ந்த வீட்டை விட்டு செல்ல அவர்கள் விரும்பவில்லை.
மின் கம்பிகள்
அவ்வாறு மக்கள் புதிய கிராமங்களுக்கு செல்லாததால் அங்கு கட்டப்பட்ட வீடுகள் சிதிலமடைந்து விட்டன. அங்கு அமைக்கப்பட்ட குழாய்கள், இரும்பு கம்பிகள், மின் கம்பிகளை திருடி சென்றுவிட்டனர். இந்த விஷயத்தில் அரசு மீது எந்த தவறும் இல்லை. மக்கள் புதிய கிராமங்களுக்கு வராததால் கட்டிடங்கள் சேதம் அடைந்தன. அதனால் எதிர்க்கட்சியினர் அரசை குறை கூற வேண்டாம்.
இவ்வாறு கோவிந்த் கார்ஜோள் கூறினார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய காங்கிரஸ் உறுப்பினர் எம்.பி.பட்டீல், 'அரசால் அமைக்கப்பட்ட புதிய கிராமங்களில் வீடுகள் மட்டும் கட்டியுள்ளனர். ஆனால் சாலை, குடிநீர் போன்ற வசதிகள் ஏற்படுத்தவில்லை. அதனால் மக்கள் அந்த கிராமங்களில் குடியேறவில்லை. இதற்கு எனது தொகுதியில் உள்ள கிராமங்களே சாட்சி' என்றார்.
எடியூரப்பா
அதைத்தொடர்ந்து பேசிய முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, 'நான் 2009-ம் ஆண்டு முதல்-மந்திரியாக இருந்தபோது, வட கர்நாடகத்தில் வரலாறு காணாத மழை பெய்தது. நான் பெங்களூருவில் வீதி வீதியாக சென்று பிச்சை எடுத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களை வேறு இடத்திற்கு இடம் மாற்றினேன். அங்கு வீடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. சில மக்கள் தங்களின் சொந்த கிராமத்திலேயே இருக்க வேண்டும் முடிவு செய்து புதிய கிராமங்களுக்கு இடம்பெயரவில்லை. அதனால் சில குடியிருப்பு கட்டிடங்கள் சேதம் அடைந்திருக்கும்' என்றார்.