புதுவையில் 3வது நாளாக அரசு போக்குவரத்து பணியாளர்கள் வேலை நிறுத்தம்
அரசு பஸ் ஊழியர்களை தாக்கிய தனியார் பஸ் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரி,
புதுவையில் கடந்தசில நாட்களாக நேர பிரச்சினை காரணமாக புதுவை அரசு பஸ் (பி.ஆர்.டி.சி.) ஊழியர்களை தனியார் பஸ் ஊழியர்கள் தாக்கி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அரசு பஸ் ஊழியர்களுக்கும், தனியார் பஸ் ஊழியர்களுக்கும் இடையே தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில்,. பி.ஆர்.டி.சி. ஊழியர்கள் தொடர்ந்து தாக்கப்படும் சம்பவத்தை கண்டித்து நேற்று முன்தினம் மாலை ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுவையில் இருந்து இயக்கப்படும் பி.ஆர்.டி.சி. பஸ்கள் எதுவும் இயக்கப்படவில்லை. பஸ்கள் புதிய பஸ் நிலையம் பின்புறம் உள்ள பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு இயக்கப்படும் பஸ்கள் பணிமனையில் ஓய்வெடுத்தன.
பி.ஆர்.டி.சி. பஸ்கள் ஓடாததால் கிராமப்புறங்களில் இருந்து நகரப்பகுதிக்கு வருவோர் பாதிக்கப்பட்டனர். பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மாணவ, மாணவிகளும் சிரமத்துக்கு உள்ளாகினர். மேலும் சென்னை, மாகி, திருப்பதி உட்பட வெளி மாநில பகுதிகளுக்கும் பஸ்கள் ஓடவில்லை.
முன் அறிவிப்பு இன்றி போராட்டத்தில் ஈடுபட்ட புதுவை, காரைக்காலை சேர்ந்த பி.ஆர்.டி.சி. ஒப்பந்த டிரைவர்கள், கண்டக்டர்கள் என 12 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் 3வது நாளாக இன்றும் பணி செய்யும் போது பாதுகாப்பு வேண்டும் , பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கூறி அரசு போக்குவரத்து பணியாகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.